சென்னையில் 2- ஆவது நாளாக ரவுடிகள் வேட்டை.. 147 பேர் அதிரடி கைது.. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!
Chennai Rowdies Arrested : சென்னையில் 2- ஆவது நாளாக போலீசார் மேற்கொண்ட ரவுடிகள் வேட்டையில் 147 பேரை கைது செய்தனர். அத்துடன், ரவுடிகளுக்கு பெருநகர சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
சென்னை மாவட்டத்தில் 2- ஆவது நாளாக போலீசார் மேற்கொண்ட ரவுடிகள் வேட்டையில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் அடிப்படையில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் கடந்த நவம்பர் 9- ஆம் தேதி முதல் தீவிர விசாரணை மற்றும் சோதனைகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 185 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 222 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2- ஆவது நாள் வேட்டையில் 147 பேர் அதிரடி கைது
அத்துடன், இன்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) 2- ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட ரவுடிகள் வேட்டையில் நேற்று செவ்வாய்க்கிழமை சென்னை பெருநகர காவல் நிலையங்களில் குற்றப் பின்னணி மற்றும் சரித்திர பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வரும் 631 ரவுடிகள் உள்பட 769 பேரை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 147 பேர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உள் படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் அவர்களிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: சென்னை மக்கள் கவனத்துக்கு… 5 நாளுக்கு ஆதம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!




போலீசாரால் கண்காணிக்கப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளி
மீதமுள்ள 572 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 612 பேரிடம் இனி குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உண்மையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்கள் போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் இந்த ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்றும், சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் வகையிலோ குற்ற செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 24 மணி நேரத்தில் 467 பேர் கைது
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 467 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். 6540 நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றம் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறி ஆனதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தது. இந்த நிலையில் தான், தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகள் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி வேட்டையால் ரவுடிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு திட்டம்.. ஈ.சி.ஆரில் பறந்த கார்.. தடுப்பு கம்பியில் மோதி விபத்து.. 6 மாணவர்கள் பலத்த காயம்!