ரூ.400 கோடி லஞ்ச புகார்.. ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்.. வழக்கில் அடுத்த பரபரப்பு!
Rs. 400 Crore Bribery Case : தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ. 400 கோடி மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த முத்துகுமாரின் கார் ஓட்டுநர் சரவணன் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார் .
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற்றுத் தருவதாக ரூ. 400 கோடி மோசடி செய்த புகாரில் கைதான முத்துக்குமாரின் ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, போலி தனியார் பள்ளிகள் நடத்தி வந்த பி.டி. அரசகுமார் என்பவர் பல்வேறு தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் ரூ. 400 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்திருந்தார். இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பி.டி. அரசகுமாரை போலீசார் கைது செய்தனர். இதில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவர் மீதும் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணன்
இதில், தொடர்புடைய முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் தலைமறைவாக இது வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முத்துக்குமாரின் ஓட்டுநர் சரவணனுக்கு தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், முத்துக்குமாரின் கார் ஓட்டுநர் சரவணன் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… சேலத்தில் ரூ. 75 கோடி வங்கி கடன் மோசடி.. மாணவர்களை பலிகடாவாக்கிய கும்பல்!
அன்பில் மகேஷ் வீட்டுக்கு பணம் கொண்டு சென்ற சரவணன்
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் முத்துக்குமார் வசூலிக்கும் பணத்தை அவரது ஓட்டுநர் சரவணன், அன்பில் மகேஷ் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சரவணனை போலீசார் கைது செய்யும் முதலில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன், அவர் கைதாகும் வரை அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான், தலைமறைவாக இருந்து வந்த ஓட்டுநர் சரவணன் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர், இந்த வழக்கில் ஏற்கனவே 6- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
அவரை நவம்பர் 25- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக இந்த வழக்கில் அன்பில் மகேஷ் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மேல்முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் 2- ஆவது நாளாக ரவுடிகள் வேட்டை.. 147 பேர் அதிரடி கைது.. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!