AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கும்பகர்ண தூக்கத்தில் தமிழக அரசு!”.. எங்கு பார்த்தாலும் கொலை, கஞ்சா விற்பனை.. தமிழக அரசை விளாசிய இபிஎஸ்!!

Tamil Nadu law and order crisis: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக அரசு மௌனம் காப்பதைக் கண்டித்துள்ளார்.

“கும்பகர்ண தூக்கத்தில் தமிழக அரசு!”.. எங்கு பார்த்தாலும் கொலை, கஞ்சா விற்பனை.. தமிழக அரசை விளாசிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Nov 2026 13:17 PM IST

சென்னை, நவ.11: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள், குற்றச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் ரீல்களை நம்பியே ஆட்சி நடத்தப்பட்டு வருவதாகவும், மக்களுக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களுக்கும் நிதிகளுக்கும் பஞ்சம் நிலவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்ட போதிலும், தற்போதைய அரசு கும்பகர்ணத் தூக்கத்தில் ஆழ்ந்துள்ளதாக அவர் சாடினார்.

இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் சினிமா பாணியில் அரங்கேறிய துணிகர கொள்ளை.. டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.5 கோடியுடன் கார் கடத்தல்!!

போதைப்பொருள் புழக்கம் குறித்த கவலை:

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருவதே மாநிலத்தில் தொடரும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கியக் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். போதைக்கு அடிமையானவர்களாலேயே கொலை மற்றும் வன்கொடுமைகள் போன்ற கொடூரச் செயல்கள் அரங்கேறி வருவதாகவும், ஆனால் இந்த அரசால் கஞ்சா விற்பனையை முற்றிலுமாகத் தடுக்கக் கூட முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பல பகுதிகளில் நம்பர் லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருவதாகவும், காவல்துறை உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அமைச்சர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள பாதுகாப்புப் பகுதிகளிலேயே பட்டப்பகலில் வெட்டிக் படுகொலைகள் நடப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேகதாட்டு அணை விவகாரமும் காவிரி உரிமையும்:

அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முதலமைச்சர் மேகதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று அறிவித்திருப்பது தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கை என்று எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, மேல்படிகை மாநிலம் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதோ அல்லது நீரைத் திருப்பி விடுவதோ கூடாது என்ற சட்டம் உள்ளதை அவர் நினைவுகூர்ந்தார். டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் நோக்கில் கர்நாடக அரசு மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்துத் தமிழக அரசு உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும், ஆனால் முதல்வர் இதுகுறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் மௌனம் காப்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவசாயிகளின் பாதிப்பும் அரசின் பொறுப்பும்:

காவிரி நீர் முழுமையாகக் கிடைக்காததால் குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நெல் உற்பட்டுக் குறைந்து விலைவாசி உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் பிரதிதிகளிடம் கோரிக்கை வைக்கச் செல்லும் பொதுமக்களும், ஏன் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது தமிழக நிர்வாகத்தின் சீர்கேட்டைக் காட்டுவதாக அவர் கூறினார். இனியாவது அரசு கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

Follow Us