தொடர் கனமழை.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3- ஆவது நாளாக தடை.. சுற்றுலா பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு!
Manimutharu Falls : திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3- ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மாற்று ஏற்பாடு செய்துள்ளது. முழு விவரத்தை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 3- ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியில் அருவி அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம் வாய்ந்த இந்த அருவிக்கு தினம்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாஞ்சோலை வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மணிமுத்தாறு அருவியில் தடாகம் மற்றும் பாதுகாப்பு பாலத்தைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவியில் 3- ஆவது நாளாக குளிக்க தடை
இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் யாருக்கும் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) 3- ஆவது நாளாகவும் தொடர்ந்து நீர் வரத்து குறையாமல் இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருப்பதற்காக வனத்துறை மாற்று ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… சேலத்தில் ரூ. 75 கோடி வங்கி கடன் மோசடி.. மாணவர்களை பலிகடாவாக்கிய கும்பல்!




சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடையாத வகையில் மாற்று ஏற்பாடு
அதன்படி, மணிமுத்தாறு அருவியின் இயற்கை அழகை தொலைவில் இருந்து பாதுகாப்பாக பார்த்து ரசிப்பதற்கு மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மணிமுத்தாறு அருவி அருகே சென்று வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறை ஊழியர்கள் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்யவில்லை.
மணிமுத்தாறு- குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
இதன் காரணமாக, மணிமுத்தாறு, குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பெரிதளவு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது, சீசன் முடிவடைந்து வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி அவ்வப்போது பெய்து வரும் மழையால், நீர்வீழ்ச்சி தளங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல, குற்றால அருவிகளிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருகிறது. அங்கு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதுச்சேரியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு திட்டம்.. ஈ.சி.ஆரில் பறந்த கார்.. தடுப்பு கம்பியில் மோதி விபத்து.. 6 மாணவர்கள் பலத்த காயம்!