கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்? ரயில்வேயின் தீபாவளி கிஃப்ட்.. முழு விவரம்!
Kilambakkam Railway Station Opening: கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற தகவலை சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை விரிவாக பார்க்கலாம்.
சென்னை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது, செயல்பாட்டில் இருந்து வரும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், சென்னையின் நகர பகுதியில் இருந்து கிளாம்பக்கத்திற்கு சரியான பேருந்து வசதி மற்றும் ரயில் வசதி உள்ளிட்டவை இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறப்பு
இருந்தாலும், இந்த பேருந்துகளில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் நிலையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு எதிராக ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு.. எ.வ.வேலு மீது நோ ஆக்சன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




தீபாவளிக்கு முன்னதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு
இது தொடர்பாக, சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ரயில் நிலையத்தை பராமரிப்பது தொடர்பாக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார்.
3 நடைமேடைகளுடன் தயாராகும் ரயில் நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையொட்டி, செல்லும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று ரயில்வே துறையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில், வண்டலூர்- ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகளுடன் இயக்கப்படும் மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!