4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காமூகனை அரிவாளால் வெட்டி காவல் நிலையத்துக்கு இழுத்து சென்ற வீர பாட்டி.. கரூரில் பெரும் பரபரப்பு!
Karur Crime : கரூர் மாவட்டத்தி ல் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டி காவல் நிலையத்துக்கு தரதரவென இழுத்து சென்ற சம்பவம் அந்தப் பகுதிில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கரூர் மாவட்டத்தில் நகரப் பகுதிக்கு அருகே 4 வயது சிறுமி வசித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் ( 31 வயது). கட்டிட தொழிலாளியான இவர், சம்பவத்தன்று 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு நேரடியாக மாணிக்கத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு, அவரிடம் மூதாட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, மாணிக்கமும், மூதாட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த மூதாட்டி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் மாணிக்கத்தை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.
நடுரோட்டில் தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்
உடனே, மூதாட்டி மாணிக்கத்தை தரதர என இழுத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். அப்போது, செல்லும் வழியில் மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். உடனே, அவர்களும் மாணிக்கத்தை நடு ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். இதில், தொழிலாளி மாணிக்கத்துக்கு தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க: தென்காசியில் மின் இணைப்புக்கு லஞ்சம்.. ஊழல் தடுப்பு துறை வைத்த பொறி.. வசமாக சிக்கிய வணிக ஆய்வாளர்!
அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு சிகிச்சை
இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து தொழிலாளி மாணிக்கத்தை மீட்டனர். கடும் தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணிக்கத்தை கரூர் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி மாணிக்கம் மீதும், சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் போலீசார் தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் 4 வயது சிறுமிக்கு தொழிலாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவமும், அவரை மூதாட்டி அரிவாளால் வெட்டிய சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அனந்தபுரி ரயிலில் ரூ. 3 கோடி வைர நகை கொள்ளை.. துப்பறிந்து தூக்கிய தனிப்படை… சினிமா பாணியில் சிக்கிய கில்லாடிகள்!