துபாய் டூ திருச்சி விமான சேவை.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
Dubai To Trichy Air India Express Flight: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்து துபாய் மற்றும் திருச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அமீரகத்துக்கு வெளிநாட்டு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், இன்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி முதல் தங்களது விமான சேவைகளை ரத்து செய்திருந்தன. இருந்தாலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், நாளடைவில் போர் பதற்றம் தீவிரமடைந்த காரணத்தால் அந்த சிறப்பு விமானங்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே வருகிற மே 1- ஆம் தேதி முதல் வழக்கம்போல விமான சேவைகள் தொடங்கப்படும் என்று அந்த நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 18) முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விமான சேவையால் மக்கள் மகிழ்ச்சி
ஆனால், இந்த விமான சேவையில் விமானத்துக்கான கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், துபாய் முதல் திருச்சிக்கு மீண்டும் நேரடி விமான சேவை அமீரகத்தில் இருந்து தொடங்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். துபாயில் இருந்து சர்வதேச விமான நிலைய முனையம் 2- இல் இருந்து ஐஎக்ஸ்-6622 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று முதல் அமீரக நாட்டின் நேரப்படி மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி இரவு 8 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோடை விடுமுறைக்காக சிறப்பு ரயில்கள்.. லிஸ்ட் இதோ!




திருச்சியில் இருந்து துபாய்க்கு விமான சேவை
இதே போல, மறு மார்க்கமாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் பிற்பகல் 2.55 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாளை ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 19) விமான சேவைகள் இயக்கப்படுவது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. நாளை மறுநாள் திங்கள்கிழமை ( ஏப்ரல் 20) முதல் தொடர்ச்சியாக விமான கட்டணங்களுடன் முன்பதிவுக்கு இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் பதற்றம்
கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தொடங்கியது. இதில், இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன, கேஸ் வினியோகம் தடைப்பட்டது. இந்த போரின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “என் மரணத்திற்காக ஒரு கூட்டமே காத்திருக்கிறது”.. ராமதாஸின் அதிரவைக்கும் வாக்குமூலம்!