ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள்.. ஷாக் கொடுத்த அதிமுக.. இடைத்தேர்தல் நடத்த தடை கோரி மனு!
தமிழக அரசின் சார்பில் ஆஜரான தற்போதைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடுகையில், "அந்த 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது அவர்களுடைய சொந்த முடிவு; இதில் எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது நிர்பந்தங்களோ இல்லை. தகுதி நீக்கம் தொடர்பாகச் சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை, ஜுன் 15: பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேரின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் கைப்பற்றின. தவெக ஆட்சி அமைக்கப் போதுமான பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் ‘குதிரை பேரம்’ மூலமாகத் தங்கள் பக்கம் இழுத்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
மேலும், அவர்கள் தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததால், அவர்களுக்கு எதிராகக் கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சபாநாயகரிடம் அதிமுகவின் சட்டமன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மனு அளித்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு:
இதனிடையே, எம்.எல்.ரவி என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, அந்த 4 அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறு; எனவே இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக மற்றும் அக்கட்சியின் கொறடா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் வாதாடுகையில்,
தகுதி நீக்க மனு நிலுவையில் உள்ளதால், சபாநாயகர் வேறு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ராஜினாமா செய்த 4 உறுப்பினர்களின் தொகுதிகளுக்குத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழக அரசுத் தரப்பு விளக்கம்:
தமிழக அரசின் சார்பில் ஆஜரான தற்போதைய தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதாடுகையில், “அந்த 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருப்பது அவர்களுடைய சொந்த முடிவு; இதில் எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது நிர்பந்தங்களோ இல்லை. தகுதி நீக்கம் தொடர்பாகச் சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை, அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!
நீதிமன்றத்தின் முடிவு:
அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மனுவிற்கு இன்னும் வழக்கு எண் பதிவு செய்யப்படாததால், அந்த நடைமுறைகளை முடித்து இந்த அனைத்து மனுக்கள் மீதும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விசாரணை நடத்தப்படும் என்று கூறி, நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.