IND A vs SL A: பழிவாங்கிய சூர்யவன்ஷி.. 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து உலக சாதனை.. மிரட்டல் சம்பவம்!!
இளம் வீரரின் இந்த ஒழுங்கீனச் செயலை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், ஐபிஎல் 2026-ன் 'மிகவும் மதிப்புமிக்க வீரர்'விருதை வென்ற வைபவ், இந்த 50 ஓவர் தொடரில் தொடர்ச்சியாகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
கிரிக்கெட் உலகில் எப்போதும் ஒரு தாரக மந்திரம் உண்டு “எதிர்கால நட்சத்திரங்களை வம்புக்கு இழுக்கக் கூடாது” அதனை இன்று இலங்கை மண்ணில் நிரூபித்துக் காட்டியுள்ளார் இந்திய இளம்புயல் வைபவ் சூரியவன்ஷி. இலங்கை ஏ ( IND A vs SL A) அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில், அவர் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த இலங்கை அணியையும் நிலைகுலையச் செய்தார். தம்புள்ளையில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுளிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மனதில் ‘பழிவாங்கும்’ வெறியுடன் மட்டுமே விளையாடினார். தான் எதிர்கொண்ட 11-வது பந்திலேயே அரைசதத்தை எட்டி, 50 ஓவர் (லிஸ்ட் ஏ) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைத் தன்வசமாக்கினார்.
இதையும் படிக்க: வைபவ் சூர்யவன்ஷி மீது பாயும் நடவடிக்கை? பிசிசிஐ செயலாளர் விளக்கம்
இதற்கு முன்னதாக, 2005-06 இலங்கை உள்நாட்டுப் போட்டியில் கெளசல்யா வீரரத்னே 12 பந்துகளில் அடித்த அரைசதமே உலக சாதனையாக இருந்தது. தற்போது 20 ஆண்டுகள் பழமையான அந்த சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். மேலும், இந்திய அளவில் 2025-26 விஜய் ஹசாரே தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக சர்பராஸ் கான் 15 பந்துகளில் அடித்த அரைசதமே சாதனையாக இருந்தது. அதையும் வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் ருத்ரதாண்டவம்:
Vaibhav Sooryavanshi says ‘Good Morning’ 💥
Watch Sri Lanka ‘A’ vs India ‘A’, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. 📺#SonySportsNetwork #SonyLIV #TalentTVCup pic.twitter.com/e5PDd6NNPd
— Sony Sports Network (@SonySportsNetwk) June 21, 2026
பிரியான்ஷ் ஆர்யாவுடன் தொடக்க வீரராக களம் புகுந்த வைபவ், முகமது சிராஜ் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து தனது அதிரடியைத் தொடங்கினார். அடுத்த பந்திலேயே ‘தேர்ட் மேன்’ திசைக்கு மேல் ஒரு சிக்ஸர் பறந்தது. இடதுகை பேட்ஸ்மேன்களான இவர்களைக் கட்டுப்படுத்த இலங்கை கேப்டன் சஹான் ஆராச்சிகே உடனே சுழற்பந்து வீச்சை அறிமுகப்படுத்தினார், ஆனால் அது பலனளிக்கவில்லை. சிராஜ் வீசிய 3-வது ஓவரில் மட்டும் வைபவ் 26 ரன்களைக் குவித்தார்.
அடுத்து வந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் துலாஜ் சமுதிதாவின் பந்துகளையும் வைபவ் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். வைபவ்வின் இந்த அசுரத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்த இலங்கை பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லென்த்தை முற்றிலும் மறந்தனர். குறிப்பாக கவர் திசையில் அவர் அடித்த சிக்ஸர்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின. மொத்தமாக 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்த அவர், வெறும் 3 சிங்கிள்ஸ் மட்டுமே எடுத்தார்.
நூலிழையில் தவறிய அதிவேக சதம்:
முன்னதாக இந்தத் தொடரின் முந்தைய 4 போட்டிகளில் வைபவ் நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், அதை பெரிய ரன்களாக மாற்றத் தவறியிருந்தார். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே, இந்த முக்கிய இறுதிப்போட்டியிலும் மிகச்சரியான நேரத்தில் தனது விஸ்வரூபத்தை அவர் காட்டியுள்ளார்.
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 29 பந்துகளில் அடித்த அதிவேக ‘லிஸ்ட் ஏ’ சத சாதனையை வைபவ் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9-வது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இலங்கை கேப்டன் ஆராச்சிகேவின் சுழற்பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று மிட்-ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து 94 ரன்களில் வெளியேறினார். எனினும், அவர் வெளியேறுவதற்குள் இலங்கை அணிக்குச் செய்ய வேண்டிய சேதத்தை முழுமையாகச் செய்து முடித்திருந்தார்.
பின்னணியில் உள்ள ‘முந்தைய மோதல்’
இந்த 15 வயது இளம் வீரர் இவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடியதற்குக் காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தம்புள்ளை மைதானத்தில் நடந்த சம்பவம்தான். இலங்கை அணிக்கு எதிரான ‘சூப்பர் ஓவர்’ தோல்விக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது இலங்கை வீரர் விஷேன் ஹலம்பாகே என்பவரை வைபவ் கோபமாகத் தள்ளிய காட்சிகள் கேமராக்களில் பதிவாகின. ஹலம்பாகே வைபவ்வை நோக்கி, “வீட்டுக்கு போ தம்பி, இது ஐபிஎல் கிடையாது” என்று வம்பிழுத்துக் கேலி செய்ததாகக் கூறப்பட்டது.
இளம் வீரரின் இந்த ஒழுங்கீனச் செயலை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், ஐபிஎல் 2026-ன் ‘மிகவும் மதிப்புமிக்க வீரர்’விருதை வென்ற வைபவ், இந்த 50 ஓவர் தொடரில் தொடர்ச்சியாகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தார்.
இதையும் படிக்க: மகளிர் உலகக்கோப்பை: ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்சிபி வீராங்கனை – யார் இந்த பிரேமா ராவத்?
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கும் விமர்சனங்களுக்கும் வைபவ் சூர்யவன்ஷி தனது பேட் மூலம் மிகச்சிறந்த பதிலை வழங்கியுள்ளார். தன்னை வம்பிழுத்த அதே பந்துவீச்சை துவம்சம் செய்து, ஒழுக்கக் கட்டுப்பாட்டு விமர்சனங்களை தனது அபார திறமையால் ஈடு செய்துள்ளார்.