தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட் இதோ..
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், வடக்கு கேரள பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. வடக்கு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க : “அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்”.. மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு!!
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஜுன் 21) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் மழை நிலவரம்:
தொடர்ந்து, நாளை (ஜுன் 22) தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும் வரும் 23 முதல் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிக்க : நீட் மறுதேர்வு.. முறைகேடுகளைத் தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்.. என்னென்ன? முழு விவரம்!!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.