பேனா கிடைக்குமா?.. டெலிவரி ஊழியர் போல் நடித்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. பகீர் சம்பவம்!
Young Woman Assaulted by a Man in Pune | புனேவில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை நோட்டமிட்ட நபர் ஒருவர், யாரும் இல்லாத நேரம் பார்த்து டெலிவரி ஊழியரை போல இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே, ஜுலை 04 : புனேவில் (Pune) டெலிவரி ஊழியரை (Delivery Worker) போல நடித்த நபர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் பேனா இல்லை என கூறிய அந்த நபர், இளம் பெண்ணை பேனா எடுத்துவருமாறு கூறி திசை திருப்பி வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இளம் பெண் தனது சகோதரருடன் வசித்து வரும் நிலையில், அவர் ஊருக்கு சென்றிருந்ததால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த நபர் இத்தகைய கொடூர செயலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனியாக இருந்த இளம் பெண் – திட்டமிட்டு வன்கொடுமை செய்த நபர்
புனேவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஐடியில் பணிபுரியும் இளம் பெண் ஒருவர் தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது சகோதரர் வெளியூருக்கு சென்ற நிலையில் இளம் பெண் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட நபர் ஒருவர், இளம் பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி ஊழியரை போல சென்றுள்ளார். அவர் அந்த பெண்ணிடம் வங்கி ஆவணங்கள் வந்திருப்பதாகவும் தன்னிடம் பேனா இல்லை என்றும், பேனா எடுத்து வரும்படியும் கூறியுள்ளார். அதனை நம்பி இளம்பெண் பேனா எடுக்க உள்ளே சென்றுள்ளார்.
அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம் பெண் பாலியல் வன்கொடுமை
அப்போது அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், இளம் பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அவர் மயக்கம் அடைந்துள்ளார். பிறகு மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த அந்த இளம் பெண் தனது உடைகள் களையப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் தனது மொபைல் போனில் அந்த நபர் தான் மயக்க நிலையில் இருந்த போது தன்னுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.




புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டல்
அதுமட்டுமின்றி இளம் பெண்ணுக்கு அந்த நபர் இந்த சம்பவத்தை யாரிடமும் வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டல் விடுப்பு சென்றுள்ளார். அவ்வாறு இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிடப்படும் என்றும் மீண்டும் வருவேன் என்றும் அந்த புகைப்படத்தில் அவர் மிரட்டல் விடுத்திருந்துள்ளார்.
தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
இதனால் பயந்து போன இளம் பெண் நடந்த சம்பவம் குறித்து தனது உறுப்பினர்களிடம் தெரிவித்த நிலையில் அவர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.