மாணவர்கள் மீது தடியடியா?.. டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.. தலைமை நீதிபதி அதிரடி!!
Supreme Court Slams Delhi Police: டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்திற்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவல்துறையின் வரம்பு மீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.
டெல்லி, ஜூலை 27: டெல்லியில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய கொடூரமான தடியடி தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “காவல்துறையின் வரம்பு மீறிய எந்தவொரு நடவடிக்கையையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது” என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அதிரடியாகத் தெரிவித்துள்ளது. டெல்லியில் தேர்வு முறைகேடுகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” சார்பில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது, மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாகத் தடியடி நடத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோதே நீதிபதிகள் இந்த காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : உங்கள் அன்பும் நம்பிக்கையும் எனக்கு வலிமை” – இளைஞர்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி..
“AK-47 துப்பாக்கிகளுடன் காவல்துறை”:
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அளவுக்கு அதிகமான காவலர்கள்: அமைதியான முறையில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மிக அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.
டெல்லி மட்டுமின்றி பீகார் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து கடுமையான தடியடி நடத்தி வருகின்றனர். இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், “போராட்டக்காரர்களால் காவல்துறையினரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்; சூழலைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என வாதிட்டார்.
ஒவ்வொரு மனிதனின் உயிரும் முக்கியம்:
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்த முக்கியக் கருத்துகள், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி முழுமையான உரிமையையும் உத்தரவாதத்தையும் நாடு வழங்கியுள்ளது. தீவிர போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே காவல்துறையினர் தங்களுடைய வரம்பை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது.
“போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே அதன்மீது தடியடி நடத்த வேண்டும் என்பதில்லை. ஜனநாயகச் செயல்முறைக்குச் சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறை அவசியம்” எனத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது:
“யார் எவர் என்ற பாகுபாடின்றி, நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனின் உயிரும் மிகவும் முக்கியமானது” என்று நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி வலியுறுத்தினார். அதேவேளையில், போராட்டத்தின் போது சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் மட்டுமே காவல்துறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாமே தவிர, உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெளிவாகத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!
இச்சம்பவம் தொடர்பான அனைத்து மனுக்களையும் ஒன்றிணைத்து நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் உச்சநீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது.