வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!
Public Examinations Amendment Bill: தேசிய போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்ட முறைகேடுகளைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யும் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
டெல்லி, ஜூலை 27: தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணிகளுக்கான பொதுத் தேர்வுகளில் ஏற்படும் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை உள்ளடக்கிய பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நீட் உள்ளிட்ட பல்வேறு தேசியத் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அவசரச் சட்டத்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி.. செந்தில் பாலாஜியிடம் 2- ஆவது நாளாக விசாரணை.. கேள்விகளால் துளைத்தெடுத்த போலீசார்!
மசோதாவின் முக்கிய அம்சங்கள் & கடும் தண்டனைகள்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களில் முறைகேடு மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகள் அல்லது நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க மசோதா வழிவகை செய்கிறது. முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்கப்படவுள்ளது. இச்சட்டம் மூலம் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகள் மேலும் பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழு:
தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நீலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டப் பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய வல்லுநர்கள், நந்தன் நீலேகனி – தலைவர் (தொழில்நுட்ப வல்லுநர் & இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்), எஸ். சோமநாத் – இஸ்ரோ முன்னாள் தலைவர், தபன் டேகா – மத்திய உளவுத்துறை முன்னாள் இயக்குநர், வி. காமகோடி – சென்னை ஐஐடி இயக்குநர், அனிதா கர்வால் – முன்னாள் மத்திய கல்வித்துறைச் செயலாளர், அம்ரித் லால் மீனா – தளவாட நிபுணர். இக்குழு தொழில்நுட்ப பாதுகாப்பு, தேர்வு கட்டமைப்பு சீர்திருத்தம் மற்றும் NTA-வின் மேம்பாடுகள் குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.
இளைஞர்களிடம் பேசிய பிரதமர் மோடி:
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் காணொலி வாயிலாக நாட்டின் இளைஞர்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு சீர்திருத்தங்களை மிகக் கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார். “நந்தன் நீலேகனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, தேர்வு முறையில் மாற்றங்களைக்கொண்டு வர உயர் அதிகாரம் பொருந்திய குழுவாகச் செயல்படும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தேர்வும் எவ்வித முறைகேடுகளுமின்றி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
பிற மசோதாக்கள்:
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மட்டுமின்றி, தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதங்கள் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு சட்டங்கள் தொடர்பான முக்கிய மசோதாக்களும் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.