கடத்தப்பட்டதாக நாடகமாடிய 13 வயது சிறுமி.. விசாரணையில் வெளிவந்த உண்மை!
13 Year Old Girl Stages Her Kidnapping | மத்திய பிரதேசத்தில் வீட்டில் தாய் தினமும் திட்டியதால்,13 வயது சிறுமி தன்னை கடத்தியது போல் நாடகமாடியுள்ளார். சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அதிர்ச்சியூட்டும் சில உண்மைகள் வெளியாகியுள்ளது.

போபால், ஜூலை 01 : மத்திய பிரதேசத்தை (Madhya Pradesh) சேர்ந்த 13 வயது சிறுமி போலி மிரட்டல் கடிதத்துடன் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளார். சிறுமியை காணவில்லை என குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில், சில பகீர் தகவல்கள் வெளியே வந்துள்ளது. போலீசாரின் விசாரணையில் சிறுமியை யாரும் கடத்தவில்லை என்றும், தனது தாயிடம் தினமும் திட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்கவே சிறுமி இந்த செயலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சிறுமி தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியது ஏன், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடத்தப்பட்டதாக நாடகமாடிய 13 வயது சிறுமி
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த, 13 வயது சிறுமியை கடத்தியதாக அவரது வீட்டில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதனை படித்து பதறிப்போன சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று அது குறித்து புகார் அளித்துள்ளனர். சிறுமியின் வீட்டில் இருந்து கிடைத்த கடிதத்தில், உங்கள் மகள் எங்களுடன் இருக்கிறார். அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் ரூபாய் 15 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், இது குறித்து போலீசிடம் தெரிவித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் கடிதத்தில் எழுதி இருந்த நிலையில் பெற்ற உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த உண்மை
பெற்றோரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 13 வயது சிறுமி என்பதால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், அந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், அந்த பகுதியில் உள்ள ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய நிலையில், சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, சிறுமியை தான் தான் ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை தேடும் பணியை தீவிரப்படுத்திய போலீசார் 7 மணி நேரத்திற்கு பிறகு அவரை மீட்டுள்ளனர். அப்போது சிறுமி தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார். அது குறித்து கூறியுள்ள அவர், நண்பர்களுடன் தொலைபேசியில் அதிக நேரம் பேசுவதாலும், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதாலும் தனது தாய் தன்னை தினமும் திட்டியதாக கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்து வெளியேறி நிம்மதியாக வாழக வேண்டும் என்று இந்த செயலை செய்ததாக அவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.