முட்டையுடன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள் – ஏன் தவிர்க்க வேண்டும்?
Health Tips : காலையில் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்? அப்படியானால், சில குறிப்பிட்ட உணவுகளுடன் முட்டையைச் சேர்த்து உண்பதைத் தவிர்க்கவும்.ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். முட்டையுடன் சேர்ந்து சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள மக்களின் காலை உணவில் முட்டை ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது. புரதம், வைட்டமின் டி, அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த முட்டை, தசை வளர்ச்சி, மூளை செயல்பாடு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும், முட்டையுடன் சேர்த்து உண்ணப்படும் சில உணவுகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். முட்டையில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடிய மற்றும் செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
1. டீ
வேகவைத்த முட்டை அல்லது ஆம்லெட் சாப்பிட்ட உடனேயே சூடான தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இது நல்லதல்ல. தேநீரில் உள்ள பாலிபினால்கள் , முட்டையில் உள்ள புரதத்தை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் இதழில் வெளியான ஆய்வின்படி, முட்டையுடன் தேநீர் அருந்துவது புரதம் கிடைப்பதை 17 சதவீதம் வரை குறைக்கலாம். இது வாயுத் தொல்லை, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, முட்டை சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து தேநீர் அருந்துங்கள்.
இதையும் படிக்க : Health Tips: அவகேடோ முதல் கிவி வரை… பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்..!




2. சோயா பால்
பால் வகைகளுக்கு மாற்றாகப் பலரால் பயன்படுத்தப்படும் சோயா பாலை, முட்டையுடன் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல. இவை இரண்டிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புரத உணவுகளை உட்கொள்வது, உடல் அவற்றை உறிஞ்சும் திறனைக் குறைக்கலாம். இவ்விரண்டு உணவுகளிலும் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற, அவற்றை நாளின் வெவ்வேறு நேரங்களில் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. சர்க்கரை
முட்டையுடன் இனிப்பு பலகாரங்கள் அல்லது பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கவும். முட்டையில் உள்ள அமினோ அமிலங்கள் சர்க்கரையுடன் இணையும்போது, உடலில் சில தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் உருவாகின்றன. இது இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. வாழைப்பழம்
முட்டை மற்றும் வாழைப்பழம் ஆகிய இரண்டும் சத்துக்கள் நிறைந்தவை என்றாலும், அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமான செயல்முறையை மந்தமாக்கக்கூடும். இவ்விரு உணவுகளும் வயிற்றில் சிதைந்து செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இது வயிற்று உப்புசம் மற்றும் வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். காலை உணவாக முட்டையை உட்கொண்டால், சிறிது நேரம் கழித்தே வாழைப்பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது.
இதையும் படிக்க : சித்த மருத்துவ சிகிச்சைகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு…
5. இறைச்சி
முட்டையுடன் அதிக அளவிலான இறைச்சிஅல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சியைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவை இரண்டிலும் அதிக அளவு புரதமும் கொழுப்பும் இருப்பதால், இது செரிமான மண்டலத்திற்குப் பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும். இதனால் உணவுக்குப் பிறகு அதிக சோர்வு, மந்தநிலை மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் ஏற்படலாம். முட்டையுடன் இறைச்சிக்கு பதிலாக காய்கறிகள் அல்லது தானியங்களைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.
முட்டையின் முழுமையான ஊட்டச்சத்து மதிப்பைப் பெற, அதனுடன் சேர்த்து உட்கொள்ளும் உணவுகள் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். செரிமானப் பிரச்னைகள் அல்லது பிற உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள், மருத்துவ உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.