சேலத்துக்கு உங்க விஜய் நான் வரேன்…திட்டமிட்டபடி மக்கள் சந்திப்பு..நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி!
Vijay Public Meeting: சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், திட்டமிட்டபடி வருகிற பிப்ரவரி 13- ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது .

சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணம், மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு காவல்துறை உரிய அனுமதி வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதன்படி, வருகிற பிப்ரவரி 13- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சேலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்வதற்காக மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் கடந்த வாரம் மனு அளித்திருந்தனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மீண்டும் அனுமதி கோரி மனு
அந்த மனுவில், சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி தருமாறு குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, சீலநாயக்கன்பட்டியில் காவல் உதவி ஆணையர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை என்றும், கூடுதலாக இடம் தேர்வு செய்யுமாறும், தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் 10 வகையான ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கோரி மனு அளிக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் படிக்க: திமுக உடன் பேச்சவார்த்தை நடத்த 36 நாட்களாக காத்திருக்கிறோம்.. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்
தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மீண்டும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஆய்வு செய்த மாவட்ட காவல் துறை சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராஜர் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 13- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள்
அதில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், கழிப்பறை, உணவு, அவசர தேவைகளால் மருத்துவம் என்பன உள்ளிட்டவற்றை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செய்யப்பட்டிருக்க வேண்டும். வாகனங்கள் நிற்கும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
3 மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும்
மேலும், பிப்ரவரி 13-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சுமார் 3 மணி நேரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்த கட்சியினருக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதி..”வி”-இல் தொடங்கும்..எந்த தொகுதி அது!