‘விருதுநகரில் மாநாடு நடத்தினால் வெற்றி, அடுத்த தேர்தலில் வெற்றி உறுதி…. மு.க.ஸ்டாலின் பகிர்ந்த சுவாரசியத் தகவல்
M. K. Stalin Praises Virudhunagar : விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி தென்மண்டல மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் நமக்கு வெற்றி உறுதி என்றும் 2019 ஆம் ஆண்டில் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம் என்று பேசினார்.
விருதுநகர், பிப்ரவரி 7 : விருதுநகர் (Virudhunagar) மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, கல்குறிச்சியில் பிப்ரவரி 7, 2026 அன்று நடைபெற்ற திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. அதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிகழ்வில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக என்றால் பிரம்மாண்டம், இளைஞரணி என்றால் பிரம்மாண்டம். உதயநிதி என்றால் அதைவிட பெரிய பிரம்மாண்டம். மாநாடு நடத்துவது நமக்கு வாராந்திர நிகழ்வாக மாறியுள்ளது.
‘விருதுநகரில் மாநாடு நடத்தினால் வெற்றி’
இந்த நிலையில் விருதுநகர் குறித்து பேசிய அவர், விருதுநகர் என்றால் முன்னாள் முதல்வர் காமராஜர் தான் நினைவுக்கு வருகிறார். காமராஜர் என்றாலே மதிய உணவுத் திட்டம் நினைவுக்கு வருகிறது. அதேபோல், திராவிட மாடல் ஆட்சி என்றால் காலை உணவுத் திட்டம் தான் நினைவுக்கு வருகிறது. விருதுநகரில் மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் நமக்கு வெற்றி உறுதி. விருதுநகரில் கடந்த 2004 ஆம் ஆண்டு தென் மண்டல மாநாடு நடத்தினோம் 40க்கு 40 வெற்றி பெற்றோம்.
இதையும் படிக்க : வடமாநிலத் தொழிலாளர்கள் மீதும் தொடரும் வன்முறை.. திமுக தலைவர்களே தூண்டுகோல்.. நயினார் நாகேந்திரன் ஆதங்கம்!




மேலும் 2019 ஆம் ஆண்டில் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம். இப்போது இப்போது 2026 ஆம் ஆண்டில் புதிய சாதனை படைக்கத் தயாரா? நமது இலக்கு 200, அதற்கு உழைக்கத் தயாரா? இளைஞரணியை தொடங்கியபோது விருதுநகரில் எனது காலடித்தடம் பதியாத இடமே கிடையாது. எப்போது இங்கு வந்தாலும் அதே பாசத்தையும், நேசத்தையும் கொடுக்கக் கூடிய மக்கள் விருதுநகர் மக்கள் என்றார்.
‘தமிழ்நாட்டை பாதுகாக்க நீங்கள் தேவை’
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் மூலம் 22 லட்சம் பேருக்கு நில உரிமை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு கூடியுள்ள இளைஞர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிந்தனை வாரிசுகள். தமிழுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக போராடி அதை தடுத்துள்ளது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பு என்ற வாள் இன்னும் நம் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மொழியை அழித்தால் நம்மை அழிக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்றார்.
இதையும் படிக்க : மத்திய பட்ஜெட்.. பாஜகவை கண்டித்து பிப்.12 திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு!
மேலும் பேசிய அவர், ஒருகாலத்தில் கல்வி ஒருசிலருக்கே ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஆபத்தை உடைத்து சமூகநீதியை நிலைநாட்டிய இயக்கம் திமுக. அந்த பழைய நிலையை மீண்டும் கொண்டு வர நீட் போன்ற தேர்வுகள் மூலம் முயற்சி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த உண்மையான சக்தி கொண்ட ஒரே இயக்கம் திமுக இயக்கம் தான். ஒருகாலத்தில் மாநிலங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதற்காக நாம் போராடி மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை பெற்றுத் தந்தோம். தமிழ்நாடு என்பது அவர்கள் எட்ட முடியாத ஒரே மாநிலம். அதை பாதுகாக்க நீங்கள் தேவை, என்றார்.