உச்சம் தொட்ட டிடிவி தினகரன்- சசிகலா பனிப்போர்.. நிர்வாகி நீக்கம்.. மோதல் பின்னணி என்ன?
சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், அமமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டிருந்தார் பிரச்சாரம் செய்ய சசிகலா மறுத்த நிலையில், மனக்கசப்பில் இருந்த டிடிவி அதன்பின்னர் அவரை சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, பிப்ரவரி 07: சசிகலாவை சந்தித்த ஒரே காரணத்திற்காக அமமுகவில் இருந்து ஜீவிதா நாச்சியார் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, சந்திப்பு நடந்த ஒரு மணி நேரத்தில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகியை கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம் சசிகலா – டிடிவி.தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த மோதலுக்கான பின்னணி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாகவே, சசிகலா – டிடிவி தினகரன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மோதல் பின்னணி என்ன?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவையும், ஆட்சி பொறுப்பையும் கையில் எடுக்க முனைப்பு காட்டிய சசிகலாவுக்கு பேரதிர்ச்சியாக சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை தீர்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, நான்கு ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கப் போவதாக அறிவித்தார். அதே கருத்தை கூறி அமமுக கட்சியை தொடங்கியது முதலே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்த டிடிவி தினகரன், திடீரென அதே அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
2021ல் இருந்தே மோதல்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே விகே சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கு இடையே பிணக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு, 2021 சட்டமன்ற தேர்தலின்போது சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், அமமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டிருந்தார் பிரச்சாரம் செய்ய சசிகலா மறுத்த நிலையில், மனக்கசப்பில் இருந்த டிடிவி அதன்பின்னர் அவரை சந்திக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமமுகவில் இருந்து நிர்வாகி நீக்கம்:
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் கலந்து கொண்டார். மதுரையில் அமமுகவின் முகமாக அறியப்படும் ஜீவிதா நாச்சியார், சசிகலாவின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டது டிடிவி தினகரனையும், அமமுகவினரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் விதமாக ஜீவிதா நாச்சியாரை கட்சியில் இருந்தும் நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்தார்.
மேலும் படிக்க: அரசியல் கட்சி தலைவருக்கான பிரசார வாகனங்கள் தயார் செய்யும் பணி…என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா!
துரோகம் வேர் அறுக்கப்படும்:
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைதள பக்கத்தில் “துரோகம் வேர் அறுக்கப்படும்” என ஜீவிதா நாச்சியார் பதிவிட்டுள்ளார். ஜீவிதா நாச்சியாரை கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம் சசிகலா – டிடிவி.தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.