Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்தை மறைத்த காரணத்தால் அவருக்கு அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை விடுத்தது.

விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
விஜய்க்கு அபராதம் விதித்ததில் விதமீறல் இல்லை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Feb 2026 11:46 AM IST

சென்னை, பிப்ரவரி 06: வரி ஏய்ப்பு செய்ததாக விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வருமானத்தை மறைத்த காரணத்தால் அவருக்கு அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை என நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என விஜய் தரப்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, வருமான வரித்தறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (appellate authority) விஜய் அணுகலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்த்து விஜய்யின் தவெக முதல்முறையாக தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வரும் சூழலில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: “125 நாட்கள் வேலை திட்டத்தை சீர்குலைப்பதா?”.. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.13ல் அதிமுக ஆர்ப்பாட்டம்..

தீர்ப்பு முழு விவரம்:

வருமானத்தை மறைத்த காரணத்தால் விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை, அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் என்று கூறிய நீதிமன்றம், காலம் கடந்து வருமான வரித்துறை அபராதம் விதித்தது என்ற விஜய் தரப்பு வாதத்தை நிராகரித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட கால வரம்புக்குள்தான் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது. கால வரம்பை தவிர்த்து, எஞ்சிய அம்சங்கள் தொடர்பாக வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விஜய் முறையிடலாம் என்றும் கூறியுள்ளது.

வருமான வரி வழக்கு பின்னணி:

2015 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த 2015–16 நிதியாண்டிற்கான வருமானமாக ரூ.35.42 கோடி என நடிகர் விஜய் கணக்கு காட்டியிருந்தார். அந்த ஆண்டிற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், 2015 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

வருமானத்தை மறைத்த விஜய்:

இதில், ‘புலி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அவர் பெற்ற ரூ.15 கோடியை வருமானக் கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. அதாவது, 2015 ஆம் ஆண்டு புலி படத்தின் தயாரிப்பாளர்கள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில், விஜய்க்கு காசோலை மூலம் ரூ .16 கோடியும், ரொக்கமாக ரூபாய் 4.93 கோடியும் வழங்கப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும் படிக்க: தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள்.. இனி மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் – தவெக வெளியிட்ட அறிவிப்பு..

இருதரப்பு வாதம் முடிந்து தீர்ப்பு:

விசாரணையின் போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவு 2019 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், சுமார் மூன்று ஆண்டுகள் காலதாமதமாக 2022 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதே நேரத்தில், வருமான வரித்துறை தரப்பில், வருமானவரி மதிப்பீட்டிற்கு எதிரான மேல்முறையீடு முடிவடைந்த பின்னர், ஆறு மாத கால அவகாசத்திற்குள் அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வருமானவரிச் சட்டத்தின் படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்தது முறையானதுதான் என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.