Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..

CM MK Stalin Letter to PM Modi: மேலும், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ரயில் உள்கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 08 Feb 2026 12:33 PM IST

சென்னை, பிப்ரவரி 8, 2026: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக விடுவிக்கவும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களை மீண்டும் தொடங்கவும், மாநிலத்திற்கு கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதிக்கவும் உரிய அறிவுரைகளை ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்குமாறு வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (08.02.2026) கடிதம் எழுதியுள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிதி – பிரதமர் தலையிட வேண்டும்:

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கி, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, குறிப்பாக நிலம் கையகப்படுத்துவதற்கான நிதி தாமதம் மற்றும் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குதல் போன்றவற்றில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில உண்மைக்கு புறம்பான செய்திகளையும் சுட்டிக்காட்டி, அதற்கான விளக்கமாகவே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நாளை 3 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் இயங்காது.. டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு..

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக மொத்தம் 2,500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் பெரும்பாலான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 19 முக்கிய திட்டங்களுக்காக தேவைப்பட்ட நிலங்களில் சுமார் 94 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும், ஆனால் சில திட்டங்களுக்கு தேவையான நிலத் திட்ட அட்டவணை (LPS) இன்னும் ரயில்வே துறையால் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் பணிகள் விரைந்து தொடங்க வலியுறுத்தல்:

திண்டிவனம்–நகரி, மதுரை–தூத்துக்குடி, மணியாச்சி–நாகர்கோவில், கன்னியாகுமரி–நாகர்கோவில் இரட்டிப்பு, சென்னை கடற்கரை–கொருக்குப்பேட்டை கூடுதல் வழித்தடம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன என்றும், மீதமுள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு.. தேர்வு மைய குளறுபடியால் பரபரப்பு..

நில உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க நிதி தாமதமின்றி ஒதுக்கப்படுவது அவசியம் என்றும், ரயில்வே அமைச்சகத்தின் நிதி தாமதம் காரணமாக சில திட்டங்கள் காலதாமதம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, திருவனந்தபுரம்–கன்னியாகுமரி இரட்டை அகலப்பாதை திட்டத்திற்கான இழப்பீடு நிதி இன்னும் ஒதுக்கப்படாதது கவலைக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

தேவையான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும்:

மேலும், சமீப ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு புதிய ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் ரயில் உள்கட்டமைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு தேவையான நிதியை முழுமையாக உடனடியாக விடுவிக்கவும், தூத்துக்குடி–மதுரை (அருப்புக்கோட்டை வழி) மற்றும் திண்டிவனம்–திருவண்ணாமலை போன்ற நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்கவும், புதிய ரயில்வே திட்டங்களை பரிசீலிக்கவும் பிரதமர் தலையிட வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.