தவெகவுடன் புதிய தமிழகம் கூட்டணி?.. “12 தொகுதிகளில் வெற்றி உறுதி”.. கிருஷ்ணசாமி அதிரடி!!
Tamilnadu assembly election: தான் மட்டும் எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று பாஜகவிற்கு வெற்றிபெற முடியாத 27 தொகுதிகளைக் கொடுத்துள்ளார். அதற்கான விலையை இபிஎஸ் அனுபவிக்க வேண்டி இருக்கும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூட்டணி வைத்ததுபோல் தெரியவில்லை என்றார்.
Tamilnadu Polls 2026: 60 முதல் 70 தொகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிப்போம் எனவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 நெருங்கிவரும் சூழலில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. இதனிடையே, அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத சூழலில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!
இபிஎஸ் உரிய மதிப்பு, மரியாதை தரவில்லை:
இதுகுறித்து செய்தியாளர்களை சந்ததித்த அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மற்றும் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புதிய தமிழகம் கட்சிக்கான உரிய மதிப்பை, மரியாதையை, கவுரவத்தை அளிக்க தயாராக இல்லை. அமித் ஷா எப்படி ஆனாலும் தன்னை முதல்வராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் பழனிசாமி இருக்கிறார்.




40-45 பேர் வெற்றி பெற்றால் போதும்:
அதேசமயம், தான் மட்டும் எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்று பாஜகவிற்கு வெற்றிபெற முடியாத 27 தொகுதிகளைக் கொடுத்துள்ளார். அதற்கான விலையை அவர் அனுபவிக்க வேண்டி இருக்கும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் கூட்டணி வைத்ததுபோல் தெரியவில்லை; தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய 40-45 பேர் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில்தான் அவர் இருக்கிறார் என்றார்.
70 தொகுதிகளில் போட்டியிட முடிவு:
தொடர்ந்து பேசிய அவர், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும், கடந்த 2 நாட்களாக வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடைபெற்றதாகவும், மாநிலம் முழுவதும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கட்சி செயல்பட்டு வருவதாகவும், இதில் 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடத்தில் திடீரென பள்ளம் வந்தது எப்படி? விஜய் பரபரப்பு கேள்வி
தவெகவுடன் கூட்டணி?
தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, தவெகவினர் முயற்சி எடுத்தால் கூட்டணியில் இணைவதற்கு பரிசீலிப்போம் என்றும் பதிலளித்தார். 10 முதல் 12 தொகுதிகளில் தனித்தே வெற்றி பெறுவோம். தவெக உள்ளிட்ட பிற கட்சிகள் முன்வந்தால் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும். 60-70 தொகுதிகளைக் கண்டறிந்துள்ளோம். அவற்றில் போட்டியிடுவது குறித்து உயர்மட்ட குழு ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.