சென்னை, மார்ச் 27, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
டாஸ்மாக் கடைகளில் புதிய கட்டுப்பாடுகள்:
இந்த நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு வழங்கப்படும் மதுபான அளவில் மாற்றங்களை அறிவித்தது. அதன்படி, ஒரு நபருக்கு அதிகபட்சமாக 4.5 லிட்டர் மதுபானமும், 7.8 லிட்டர் வரை பீரும் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி’.. இன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்!!
மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்களில், 750 மில்லி லிட்டர் கொண்ட 6 முழு பாட்டில்கள் அல்லது 375 மில்லி லிட்டர் கொண்ட 12 அரை பாட்டில்கள் அல்லது 180 மில்லி லிட்டர் கொண்ட 24 கால் பாட்டில்கள் வரை வாங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நபருக்கு 650 மில்லி லிட்டர் கொண்ட 12 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி விற்பனை செய்யப்பட்டால் அது கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு… யார் யார் எந்த தொகுதியில் போட்டி!
4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்:
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மட்டுமின்றி, ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். மேலும், மது தயாரிப்பு நிறுவனங்கள் மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாட்களிலும் எங்கும் மது விற்பனை நடைபெறக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.