NDA கூட்டணிக்கு வாக்குசேகரிக்கு களமிறங்கிய அமித் ஷா, ராஜ்நாத் சிங்.. அனல் பறக்கும் தேர்தல் களம்!
`Tamilnadu Assembly Election: ஹெலிபேட் தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ட்ரோன்களைப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
Tamilnadu Polls 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பரப்புரைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் உச்சகட்ட அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ஒரேநாளில் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டனர். தொடர்ந்து, இன்றைய தினம் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். அவரது வருகையை முன்னிட்டு கோவை, சென்னை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..
அமித் ஷா கோயம்புத்தூர், சென்னை (மயிலாப்பூர்), மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் அவர் மேற்கொள்ளும் ரோடு ஷோவிற்காக விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோயம்புத்தூரில் முக்கிய வீதிகள் வழியாக அவர் வாகனத்தில் சென்றபடி மக்களிடையே வாக்கு சேகரிக்க உள்ளார்.
ஈரோட்டில் ட்ரோன்கள் பறக்கத் தடை:
அமித் ஷா ஏப்ரல் 19 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவரது ஹெலிகாப்டர் கொடுமுடி வட்டத்தில் உள்ள தாமரைப்பாளையம், தாமரை மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஹெலிபேடில் தரை இறங்குகிறது. அங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக சிவகிரி பகுதிக்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஹெலிபேட் தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி ட்ரோன்களைப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிற்காக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து ஐந்தடுக்கு பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர் செல்லும் வழித்தடங்கள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜ்நாத் சிங் பரப்புரை:
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். தென்காசியில் உள்ள சிந்தாமணி பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை ராஜ்நாத்சிங் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.
பிரசாரத்திற்கு இடையே, இன்று மதியம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்கிறார். திருச்செந்தூர் பயணத்தை முடித்துவிட்டு, இன்று மாலை ராதாபுரம் சட்டசபை தொகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் இந்த முறை சட்டமன்றத் தேர்தல் நான்கு முனைப் போட்டியாக அமைந்துள்ள சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர்.