“பெண்களுக்கு மாதம் ரூ.2,000”.. ரூ.10 லட்சம் வரை வட்டியில்லாத கடன்.. தமிழக பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை..
Tamilnadu Assembly Election: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி.
Tamilnadu Polls 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை, சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். தமிழகத்தின் பொருளாதாரம், கலாசாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க : தமிழகம் வர மறுக்கும் ராகுல் காந்தி… பிரசாரத்தை புறக்கணிக்க முடிவு? இண்டி கூட்டணியில் வெடிக்கும் யுத்தம்!
பெண்கள் மற்றும் குடும்ப நலன்:
“புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”
இன்றைய தினம் சென்னையில், வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜகவின் மக்களுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @JPNadda அவர்கள் தலைமையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல்… pic.twitter.com/aYbJhNdG8q
— Nainar Nagenthran (@NainarBJP) April 14, 2026
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை நிதியுதவியாக ரூ.10,000 வழங்கப்படும். குடும்பச் சுமையைக் குறைக்கும் விதமாக பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகளின் போது ஆண்டுக்கு மூன்று விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுவதோடு, அரசின் கொள்முதலில் பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு 20% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும்.
பண்பாடு, ஆன்மீகம் மற்றும் கலாசாரம்:
தமிழகத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், முருகப்பெருமானின் விசேட தினமான தைப்பூசத் திருநாளை மாநில விழாவாக பா.ஜனதா அறிவிக்கும். மேலும், திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் பண்டைய பாரம்பரியம் மீண்டும் தொடங்கப்பட்டு, அது காலம் முழுவதும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக, தமிழ் பண்பாட்டைக் காக்கும் பல்வேறு திட்டங்கள் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு:
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். வேலைவாய்ப்பின்மை காரணமாக இ.எம்.ஐ (EMI) செலுத்த முடியாத சூழலில் உள்ள மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஓராண்டுக்குள் ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், மாவட்டந்தோறும் தமிழ் வழியில் பயிற்சி அளிக்கும் போட்டித் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு:
தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ‘தமிழக போதைப்பொருள் ஒழிப்புத் துறை’ என்ற தனித்துறை உருவாக்கப்படும். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்பிற்காகப் பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் 100% கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதோடு, பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
மீனவர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன்:
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 61 நாட்கள் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும். 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிக்க: “படிக்காவிட்டாலும் அரசு வேலை, 5 இடங்களில் தலைநகரம்”.. சீமானின் புதிய தேர்தல் முழக்கம்..
இவ்வாறு, தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும், ஊழலற்ற மற்றும் வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை வழிநடத்தும் வகையிலும் பா.ஜனதாவின் இந்த ‘தாமரை வாக்குறுதி’ தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.