சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் கனிமொழி? தென் மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டம்.. எந்த தொகுதி தெரியுமா!
Kanimozhi Karunanidhi : வருகிற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கனிமொழி கருணாநிதி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான கனிமொழி கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனார். இதைத் தொடர்ந்து, 2024- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக இருந்து வருகிறார். இதே போல, கடந்த 2007 முதல் 2019- ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த சில நாள்களாக மாநில அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பியதுடன், இது தொடர்பாக திமுக தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், தன்னை பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நலக்குறைவு காரணமாக விலகும் அமைச்சர்
தற்போது, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார். இவர், மின்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்து வரும் நிலையில் தனது உடல்நிலக்குறைவு காரணமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று திமுக தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி களமிறக்கப்படுவார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீண்டும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கட்சியினர் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்யும்போது வருத்தமாக இருந்தது – பிரதமர் மோடி வேதனை




திமுக நிர்வாகிகள் பேச்சுக்கு அமைச்சர் மறுப்பு
அப்போது, குறிக்கிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்று கூறினார். அதன்படி, தென் மாவட்டங்களில் திமுகவின் பலத்தை அதிகரிப்பதற்காக திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழியை களமிறக்குவதற்கு திமுக தலைமை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிட்டு வெற்றி பெறும் நிலையில், அவர் அமைச்சராக நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்காத கனிமொழி எம்.பி.
சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் கனிமொழி எம்பி போட்டியிடுவது தென் மாவட்டங்களில் திமுகவுக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அண்மையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக அளிக்கும் 25 இடங்களை ஏற்ககூடியது அல்ல… கிரிஷ் சோடங்கரின் பேச்சால் பரபரப்பு