தமிழக இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இடம் பெறும்..எகிறும் எதிர்பார்ப்பு!
Tamil Nadu Interim Budget : தமிழக சட்டமன்றத்தில் வருகிற பிப்ரவர் 17- ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், பெண்களுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. அதன்படி, ஆளும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பை கூட்டி உள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். அதன்படி, அமைச்சரவையும் கூட்டப்பட்டு அதில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாகவும், சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் மக்களை கவரும் வகையில் வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
மக்கள் அரண்டு போகும் அளவுக்கு பட்ஜெட் அறிவிப்புகள்
இதனிடையே, அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் எதிர்பார்க்கும் வகையில் இடைக்கால பட்ஜெட் இருக்கும் என தெரிவித்திருந்தார். இதேபோல, எதிர்க் கட்சிகள் அரண்டு போகும் அளவுக்கு இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் இருக்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் தெரிவித்திருந்தார். அதன்படி, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், ஆளும் கட்சியாக இருக்கும் திமுக மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
மேலும் படிக்க: ஒரு பிரச்சனையை சந்திக்க திறனற்றவர் விஜய்- எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்..




பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள்
அதன்படி, வருகிற பிப்ரவரி 17- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் எந்த வகையான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்பது அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது. இதில், மகளிரை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதன்படி, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் தொடர்வது, சமையல் எரிவாயு உருளைகளை இலவசமாக வழங்குவது, பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் என்பன உள்ளிட்டவையும், இதற்கு ஈடாக ஆண் வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
மாணவ, மாணவிகளுக்கு திட்டங்கள்
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான திட்டங்கள் ஆகியவை குறித்த அறிவிப்புகளும் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியும் கூடுதலாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கிராமங்கள் தோறும் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகியவை இடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: விஜய்-த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து…தவெகவினர் கடும் கண்டனம்!