வாக்குப்பதிவு நாளில் ஒரு நற்செய்தி… விடுமுறையும் உண்டு.. ஊதியமும் உண்டு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
Tamil Nadu Polling Day: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ( ஏப்ரல் 23 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9- ஆம் தேதியும், தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 23- ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மேற்கண்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன்படி, பொதுமக்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கம் எடுத்துச் செல்லக்கூடாது. அரசு அலுவலகங்களில் முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன, கட்சிகளின் கொடிக்கம்பங்கள் மறைப்புகள் கொண்டு மறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதே போல, பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு
இந்த நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 23- ஆம் தேதி ( வியாழக்கிழமை) நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், வாக்கு பதிவு நடைபெறும் நாளில் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுமுறை அளிப்பதுடன், அந்த நாளுக்கான சம்பளத்தையும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் வழங்க வேண்டும். வாக்களிக்க தகுதி உடைய அனைத்து நபர்களும் தவறாது தங்களது வாக்குகளை பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை அறிவிக்க மாட்டார் – திலகபாமா..




தமிழகம் முழுவதும் பொது விடுமுறை
வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் தமிழக முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என தலைமை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
2160 பறக்கும் படைகள் அமைப்பு
அதே வேளையில் கட்சி சார்ந்த பணிகள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதே போல, வேட்பாளர்கள் ரூ,40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது எனவும், அவ்வாறு செலவு தொகை மீறினால் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை, பரிசு பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதற்கு 2,160 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. தனிநீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை..