சென்னை, மார்ச் 25 : தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து தேர்தல் அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் . குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் ரூ.50,000க்கும் மேற்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவசர தேவைகளுக்கு பணம் எடுத்து செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுத்து செல்பவர்களுக்கு தளர்வு
தற்போதைய தேர்தல் விதிமுறைகளின்படி, ரூ.50.000க்கும் அதிகமான பணத்தை கொண்டு செல்லும் போது உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் பணத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பிறகு எடுத்து செல்லலாம் என கூறப்படுகிறது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பணம் எடுத்து செல்ல முடிாமல் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படிக்க : அய்யா பாமக என்ற புதிய கட்சியை தொடங்கும் ராமதாஸ்.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?
இதனை கருத்தில் கொண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய தளர்வை அறிவித்துள்ளார். அதன் படி இனி மருத்துவ செலவுகளுக்கு எடுத்து செல்ல செல்ல நேரடியாக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை. மருத்துவ ஆவணங்களை வாட்ஸ்அப்பில் காட்டினாலே போதுமானது. கீழே கொடுக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை சமர்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
- நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவரம்
- மருத்துவர் பரிந்துரைக் கடிதம்
- மருத்துவமனை ரசீது
இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் காட்டினாலே போதும் என அவர் தெரிவித்துள்ளார். பறக்கும் படையினர் மேற்கொள்ளும் சோதனையில் அதிகாரிகள் இந்த டிஜிட்டல் அவணங்களில் ஒன்றை சரிபார்த்து அவை நம்ப தகுந்ததாக இருந்தால் பணத்தை எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், மருத்துவ தேவைகளுக்காக பணம் எடுத்து செல்லும் மக்களிடம் மென்மையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க : சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
வணிகர்களுக்கு முக்கிய அறிவுரை
மருத்துவம் தவிர வணிகம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்து செல்லும் நபர்கள் வங்கி தொடர்பான சான்றுகள், நிறுவன ஆவணங்கள் ஆகியவற்றையும் உடன் வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தேவையற்ற சிரமங்களை தவிர்க்க பொதுமக்கள் பணம் எடுத்து செல்லும் போது உரிய ஆவணங்களை எடுத்து செல்வது கட்டாயம் எனவும் குறந்த பட்சம் அதனை டிஜிட்டல் வடிவிலாவது வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு பண விநியோகத்தை தவிர்க்கவே இந்த முறை கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.