AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி இருக்கிறது.. விசிக தனித்து போட்டி – திருமாவளவன் அதிரடி

புதுச்சேரியில் 16 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ், ‘Friendly fight’ என்ற பெயரில் நீங்களும் போட்டியிடுங்கள், நாங்களும் போட்டியிடுகிறோம்; யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள் என கேள்விப்படுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டு உள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி இருக்கிறது.. விசிக தனித்து போட்டி – திருமாவளவன் அதிரடி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 24 Mar 2026 16:36 PM IST

மார்ச் 24, 2026: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் தனித்து போட்டி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவ்க்கையில், “ புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து, சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு, இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்பதற்காக அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், சுமார் 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றோம்.

எந்த தொகுதி என முடிவாகவில்லை:

தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளை கோரியது. நீண்ட இழுபறிக்குப் பின்னர், வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான தொகுதி பங்கீடு முடிவடைந்தது. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை. திமுக தரப்பில் இருந்து விசிக-க்கு ஒரு தொகுதியை ஒதுக்க முன்வந்தாலும், அது எந்த தொகுதி என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

விசிக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தொகுதிகளில் அனைத்திலும் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இதனால், விசிக-க்கு எந்த தொகுதி என்பது தெளிவாகாத நிலையில், எங்கள் கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தனித்து போட்டியிட முடிவு:

எனவே, விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட தொகுதியிலும் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்:

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ உழவர்கரை பொதுத் தொகுதி கடந்த தேர்தலில் எங்களுக்கு காங்கிரஸ் ஒதுக்கிய தொகுதியாகும். அப்போது தனித்தொகுதியை கேட்டபோதும், அதனை வழங்காமல் இந்த தொகுதியை வழங்கினர். இருந்தபோதிலும், 6,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்ற தொகுதி என்பதால், இந்த முறையும் அதையே எங்களுக்கு வழங்க வேண்டும் என்று மூன்று தொகுதிகளை எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தோம். ஆனால், வேட்புமனுத் தாக்கல் முடிந்த பிறகு விசிக-க்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: இனி ஒரு நபர் இத்தனை பாட்டில்கள் மட்டுமே வாங்க முடியும்.. மது விற்பனையில் புதிய கட்டுப்பாடு..

அந்த ஒரு தொகுதியிலும் கூட, காங்கிரஸ் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் திரும்பப் பெறத் தயாராக இல்லை. இதனால் இழுபறி நிலை தொடர்கிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்துப் போட்டியிட்டால், கூட்டணியின் அர்த்தம் என்ன என்பது குறித்து கேள்வி எழுகிறது.

Friendly fight – காங்கிரஸ் முன்வைக்கும் கருத்து:

ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகு, கூட்டணியின் ஒப்பந்தத்திற்கு ஏற்ப செயல்படுகிறோம் என்பதை வெளிப்படையாக உறுதி செய்ய வேண்டியது கூட்டணியை முன்னிலை வகிக்கும் காங்கிரஸின் பொறுப்பு. புதுச்சேரியில் 16 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ், ‘Friendly fight’ என்ற பெயரில் நீங்களும் போட்டியிடுங்கள், நாங்களும் போட்டியிடுகிறோம்; யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள் என கேள்விப்படுகிறோம்.

இதனை கருத்தில் கொண்டு, எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில், மூன்று தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளோம்.

Follow Us