நாளை வாக்குப்பதிவு.. மாநிலம் முழுவதும் 1.47 லட்சம் போலீஸ் குவிப்பு.. துப்பாக்கியுடன் துணை ராணுவத்தினர் ரோந்துப்பணி!
Assembly Election 1.47 lakh Police Deployed: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 47 ஆயிரம் போலீசார், துணை ராணுவ படையினர், அதிவிரைவு சிறப்பு படை, முன்னாள் ராணுவத்தினர் உள்பட பல்வேறு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) “ஜனநாயக திருவிழா” என்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 4,618 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரச்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ( ஏப்ரல் 21) 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாநிலத்தில் 3,022 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு நாளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமலும், அதனை தடுக்கும் வகையிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு
அதன்படி, சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளின்போது, மாநிலம் முழுவதும் போலீசார், துணை ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், சிறை துறையினர், வனத்துறையினர், ஊர்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என சுமார் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய பாதுகாப்பு படையில் இருந்து சுமார் 295 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரம் துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதில், 26 ஆயிரத்து 203 இன்ஸ்பெக்டர்கள். சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 94 ஆயிரத்து 598 தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் அடங்குவர்.
மேலும் படிக்க: கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..




சிறப்பு அதிரடிப்படை பிரிவில் 12.150 பேர்
இதே போல, சிறப்பு அதிரடிப்படை பிரிவை சேர்ந்த 12,150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தலைநகரான சென்னை மாவட்டத்தில் ஆவடி, தாம்பரம் மாநகர போலீசாரை தவிர்த்து 38 மாவட்டங்களில் 7 மாநகர காவல் துறை பகுதிகளும் 1.17 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில், துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் ஆகியோரை தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஓய்வு பெற்ற வன காவலர் என சுமார் 20 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக வந்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபடும் துணை ராணுவம்
இதை தவிர்த்து, வாக்குப்பதிவு நாளில் 514 வாகனங்களில் அதிரடிப்படை வீரர்கள் மாநிலம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் ஏதேனும் வாக்குச்சாவடி பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் செயல்படுவர். இதை தவிர்த்து, டி. எஸ். பி., ஏ.டி.எஸ்.பி., எஸ். பி., டி. ஐ. ஜி., ஐ. ஜி., காவல் ஆணையர் ஆகியோருடன் 1,100 வாகனங்களில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பர்.
மேலும் படிக்க: ரெய்டு என அவதூறு பரப்பிய செல்வப்பெருந்தகை.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஐ.டி அதிகாரிகள் கோரிக்கை..