கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை.. நான் செய்த திட்டங்கள் எனக்காக ஓட்டுக்கேட்கும் – முதல்வர் ஸ்டாலின்..
கொளத்தூர் தொகுதியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “என்னதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை எனக்கு நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்றது. ஏனெனில் நான் அந்த அளவிற்கு உங்களோடு ஒன்றிணைந்தவன். அது மட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான்” என பேசியுள்ளார்.
சென்னை, ஏப்ரல் 21, 2026: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை மாலை 6.00 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் இறுதியாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “என்னதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் நான் முதலமைச்சராக இருந்தாலும், சென்னை எனக்கு நான் பாசமாக வளர்த்த குழந்தை போன்றது. ஏனெனில் நான் அந்த அளவிற்கு உங்களோடு ஒன்றிணைந்தவன். அது மட்டுமல்ல, சென்னைக்கு மாநகரத் தந்தையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான். பல கனவுகளுடன் நான் உருவாக்கிய திட்டங்களால் வளர்ந்திருக்கும் மாநகரம் சென்னை. அதனால் தான் அப்படி சொல்கிறேன்.
கொளத்தூர் என்னுடைய செல்லக்குழந்தை:
அதிலும் நம்முடைய கொளத்தூர் தொகுதி என்னுடைய செல்லக் குழந்தை. பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் என எந்தப் பண்டிகையாக இருந்தாலும், நான் உங்களுடன் தான் கொண்டாடி வருகிறேன்.
முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்றாலும், 10 நாட்களுக்கு ஒருமுறை கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த தொகுதிக்காக தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருக்கிறேன்.
நான் செய்த திட்டங்கள் எனக்காக பேசும்:
நான் செய்து கொடுத்த திட்டங்களே எனக்காக இங்கு ஓட்டு கேட்கின்றன. மற்ற வேட்பாளர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த நான், என்னுடைய தொகுதியில் மொத்தமாக ஒரு மணி நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளேன். கொளத்தூர் மக்கள் என்மீது காட்டும் அன்பு அப்படிப்பட்டது.
வருடம் முழுவதும் நன்றாகப் படித்த மாணவன், தேர்வுக்கு முன் ஒரு முறை மீளாய்வு செய்தால் போதுமானது போல, இத்தனை ஆண்டுகள் உங்களுக்காக உழைத்திருக்கிறேன்.
ஒவ்வொரு ஊருக்கும் சென்றபோது அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தேன். ஆனால் கொளத்தூரில், எனக்கு நானே அறிமுகம் செய்து கொள்கிறேன்.
உங்களுக்காக உழைத்த இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மூன்று முறை வாய்ப்பு அளித்தீர்கள். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, இன்னொரு முறையும் எனக்கு வாய்ப்பு வழங்குங்கள்” என கேட்டுக்கொண்டார்.