செப்.27 ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல வங்கிகள் இயங்கும்.. மத்திய நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு!
Banks To Open Sunday Sept 27, 2026 | இந்தியாவில் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை அதாவது செப்டம்பர் 27, 2026 அன்று வங்கிகள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் தான், அனைத்து பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகள் செப்டம்பர் 27, 2026 அதாவது ஞாயிற்று கிழமை வழக்கம் போல செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. யுனைடேட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU – United Forum Of Banks Union) வார விடுமுறையை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், வங்கி சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமமடைவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 23, 2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை வங்கிகள் வழக்கம் போல செயல்படுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொடர் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ள வங்கி ஊழியர்கள்
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக UFBU அறிவித்துள்ளது. அதாவது, செப்டம்பர் 28, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை என மொத்தம் மூன்று நாட்கள் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 28, 2026 திங்கள் கிழமை என்பதால், அதற்கு முந்தைய செப்டம்பர் 26, 2026 மற்றும் செப்டம்பர் 27, 2026 ஆகியவை வார விடுமுறை நாட்களாக உள்ளன. இதன் காரணமாக, மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை உருவானது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய நபர்.. இன்று ரூ.9 கோடி வருமானம்!




ஞாயிற்று கிழமை வங்கிகள் வழக்கம் போல இயங்கும் – நிதி அமைச்சகம்
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம், வார விடுமுறை என மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் செயல்படாமல் இருக்கும் நிலையில், பொதுமக்கள் வங்கி சேவைகளை பெற முடியாத சூழல் உருவாகும். அதுமட்டுமன்றி, மாத கடைசியில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்த முடியாத சூழல் உருவாகுமோ என்ற அச்சம் எழுந்தது. இந்த நிலையில் தான், மத்திய நிதி அமைச்சகம் (Ministry Of Finance) இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 27, 2026 அதாவது ஞாயிற்று கிழமை அன்று பொதுமக்கள் வழக்கம் போல தங்களது வங்கி சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.