மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு – ஊதியம் எவ்வளவு உயரும்?
DA Hike : மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் மத்திய அரசு 2 சதவிகிம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பாரக்கலாம்.
மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 2 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தையும் மத்திய அரசு 2 சதவிகிம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை 60 சதவிகிதமாக உயர்ந்துள்ளன. வழக்கமாக, ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும். ஆனால் இம்முறை தாமதம் ஏற்பட்ட நிலையில், அது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் ஒருவித கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், கடந்த 2025 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 8வது ஊதியக் குழுவின் வருகைக்காக அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
இந்த 2 சதவிகித அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1, 2026 முதல் வழங்கப்படும். இதன் மூலம் 50.5 லட்சம் அரசு ஊழியர்களும், 68.3 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வுக்காக அரசு ரூ. 6,791 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஜனவரி மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படியை இரண்டு சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்தது.
இதையும் படிக்க : இனி இபிஎஃப்ஓ தளத்தில் யுஏன் எண் ஆக்டிவேட் செய்ய முடியாது.. வெளியான முக்கிய அறிவுப்பு!




கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் கடைசியாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோது, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 55 சதவிகிதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்ந்தது. அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிலும், ஜூலை மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும். இருப்பினும், அதற்கு முன்னதாகவே 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், தற்போதுள்ள இந்த 60 சதவீத அகவிலைப்படித் தொகையானது அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படலாம்.
இந்த மாதம் ஊதியம் எவ்வளவு உயரும்?
அடிப்படை ஊதியத்தில் எத்தனை சதவிகிதம் அகவிலைப்படியாகக் கிடைக்கும்? தற்போதைய அகவிலைப்படி 58 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடிப்படை ஊதியமாக ரூ. 18,000 பெறும் ஒரு மத்திய அரசு ஊழியருக்கு, இனிமேல் அகவிலைப்படியாக ரூ. 10,800 கிடைக்கும். கடந்த மாதம் வரை, அரசு ஊழியர்கள் ரூ. 10,440 அகவிலைப்படியாகப் பெற்று வந்தனர். இம்முறை, இதில் ரூ. 360 உயர்வு ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் இந்த அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். அதாவது, ரூ. 18,000 அடிப்படை ஊதியம் பெறும் ஒரு ஊழியர், கூடுதலாக இந்த ரூ. 1,440-ஐப் பெறுவார்.
இதையும் படிக்க : EPFO: யுபிஐ மூலம் எவ்வளவு பிஎஃப் தொகையை பெறலாம் ? வெளியான முக்கிய அப்டேட்
இதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (DR) உயர்கிறது. இரண்டு கட்ட அகவிலை நிவாரண உயர்வுகள் மூலம், ரூ. 9,000 அடிப்படை ஓய்வூதியம் பெறும் ஒரு நபர், அகவிலை நிவாரணமாக ரூ. 5,400 பெறுவார். கடந்த மாதம் வரை பெற்று வந்த அகவிலை நிவாரணத் தொகை ரூ. 5,220 ஆக இருந்தது. இம்மாதம் முதல் கூடுதலாக ரூ. 180 கிடைக்கும். ஜனவரி மாதம் முதல் பின்னேற்பு அடிப்படையில் கணக்கிட்டு வழங்கும்போது, ஏப்ரல் மாத ஓய்வூதியத்தில் கூடுதலாக ரூ. 720 கிடைக்கும்.