பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் – தடுக்க உதவும் யூடியூபின் ஏஐ தொழில்நுட்பம்
YouTube expands AI deepfake detection tool : செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் தற்போது ஒருவரின் முகத்தை போலியாக மாற்றி வீடியோக்களை உருவாக்குவது மிகவும் எளிதாகிவிட்டது. இதனை தவிர்க்க யூடியூப் லைக்னஸ் டிடெக்ஷன் டூல் என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போலி வீடியோக்களை கண்டறிந்து நீக்க சொல்லலாம்.
யூடியூப் தளத்தில் அதிகரித்து வரும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோ பிரச்னைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, புதிய ஏஐ அடிப்படையிலான பாதுகாப்பு வசதியை யூடியூப் விரிவுபடுத்தியுள்ளது. இந்த புதிய வசதி மூலம், யாராவது ஒருவரின் முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி அல்லது போலியாக உருவாக்கி வீடியோக்கள் பதிவேற்றப்பட்டால், அதை கண்டறிந்து நீக்க கோரிக்கை விடுக்க முடியும். இதன் மூலம் போலியான வீடியோக்களை கண்டறிய முடியும் என்பதால் இது மிகச்சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
யூடியூபின் புதிய ஏஐ தொழில்நுட்பம்
யூடியூப் லைக்னஸ் டிடெக்ஷன் டூல் (YouTube Likeness Detection Tool) எனப்படும் உருவ ஒற்றுமையை கண்டறியும் டூல் என்பது, யூடியூப் ஸ்டுடியோவில் வழங்கப்படும் புதிய ஏஐ வசதியாகும். இது யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களை ஸ்கேன் செய்து, ஒரு கிரியேட்டரின் முகம் ஏஐ மூலம் மாற்றப்பட்டதா அல்லது போலியாக பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறியும்.
இதையும் படிக்க : இனி 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் கிடையாது… கூகுள் அதிரடி நடவடிக்கை – காரணம் என்ன?
இந்த வசதி முதலில் சில முக்கிய கிரியேட்டர்ஸ் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே பரிசோதனை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தகுதியான கிரியேட்டர்ஸ்க்கும் படிப்படியாக வழங்கப்படவுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது.
இந்த வசதியை பயன்படுத்த கிரியேட்டர் ஒருவர், யூடியூப் ஸ்டுடியோவில் லாகின் செய்ய வேண்டும். அதில் Content Dedection என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் Likeness என்ற ஆப்சனை தேர்ந்த்தெடுக்க வேண்டும். பின்னர் ஒருமுறை ஃபேஸ் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து அவர்கள் மாதிரியாக கொண்டு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை யூடியூப் தானாக கண்டறிய முயலும்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் தற்போது ஒருவரின் முகத்தை போலியாக மாற்றி வீடியோக்களை உருவாக்குவது மிகவும் எளிதாகிவிட்டது. குறிப்பாக ஒரு பிரபல கிரியேட்டர்கள் மாதிரி போலியான வீடியோக்களை உருவாக்கி தவறான தகவல்களை பரப்ப முடியும். மேலும் அவர்களை தவறாக சித்தரித்து வீடியோவும் உருவாக்க முடியும். குறிப்பாக பெண்களை குறிவைத்து இந்த மாதிரி வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா? கண்டுபிடிக்க எளிய 5 டிப்ஸ்!
சமீபத்திய தகவல்களின்படி இணையத்தில் வெளியாகும் போலியான வீடியோக்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக பெண்களை குறிவைத்து உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிரியேட்டர்கள் தங்களின் முகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக என்பதை இந்த யூடியூபின் புதிய தொழில்நுட்பம் மூலம் அறியலாம். போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டிருந்தால் அதனை நீக்க யூடியூபிற்கு கோரிக்கை விடுக்கலாம்.



