மதுபோதையில் வந்த கணவன்.. கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு.. திருமணமான 1.5 மாதத்தில் சம்பவம்!
Villupuram Crime: விழுப்புரம் மாவட்டத்தில் திருமணமான 1.5 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மது அருந்திவிட்டு வந்ததை கண்டித்ததால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த விபரீதம் நடந்ததாக என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தீப வள்ளி ( 19 வயது). இவரும் கண்டாச்சிபுரம் வட்டம், சின்ன குனத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் ( 27 வயது) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இவர்களது காதல் பெற்றோருக்கு தெரிய வரவே இரு வீட்டார் சம்பந்தத்துடன் கடந்த ஜனவரி மாதம் 28- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்த மகேஸ்வரன் தினந்தோறும் இரவு மது போதையில் வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்து வந்ததாம். இதனை தீபவள்ளி கண்டித்து வந்தாராம். இதனால், கணவன்- மனைவி இடையே, மோதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல மகேஸ்வரன் மது போதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அப்போது, மகேஷ்வரனிடம், தீப வள்ளி கண்டித்ததுடன் கோபித்துக் கொண்டு அறையில் உள்ளே சென்று கதவை மூடியதாக தெரிகிறது.
தூக்கில் தொங்கிய நிலையில் தீப வள்ளி மீட்பு
வெகு நேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த மகேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது தீப வள்ளி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே, அவரை மீட்டு முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி, தீப வள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!




பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது உடல் உடல்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தீப வள்ளியின் மாமனார் ஆறுமுகம் காணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கூறுகின்றனர். தற்கொலை செய்து கொண்ட தீப வள்ளிக்கு திருமணம் ஆகி 1.5 மாதமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
இந்த நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தீப வள்ளியின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சடலத்தை வாங்கிக்கொண்டு உறவினர்கள் கலந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்கொலை எண்ணத்தை தவிர்க்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).
மேலும் படிக்க: கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு – பிரபலங்கள் வாழ்த்து