மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
Manamadurai Akash Lockup Death : சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் போலீசாரின் விசாரணையில் கைதி ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஐஜி சரவணன் பிறப்பித்துள்ளார் .
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிலரை அரிவாளால் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து ஆகாஷ் டெலிசன் தப்பி செல்ல முயன்ற போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்த நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆகாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசார் தான் ஆகாசை அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
6 போலீசார் பணியிடை நீக்கம்
இந்த நிலையில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 காவலர்கள் என 6 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் பிறப்பித்துள்ளார். இதனிடையே, ஆகாசின் சடலத்தை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆகாசின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: லஞ்ச புகார்.. சார்-பதிவாளர் அலுவலகத்தில் புகுந்த ஊழல் தடுப்பு போலீசார்.. அடுத்து நடந்த சம்பவம்!



பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
அதில், ஆகாசுக்கு உடலில் 20 இடங்களில் காயம் மற்றும் மூளையில் ரத்தக் கசிவு உள்ளிட்டவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகாசின் ரிமாண்ட் ரிப்போர்ட் வெளியாகி இருந்தது. அதிலும், போலீசார் தனது காலில் இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், அதன் காரணமாகவே எனது கால் எலும்பு முறிந்ததாகவும் ஆகாஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த இரு தகவல்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கைதி ஆகாஷ் போலீசாரின் விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தை மேலும் எழுப்புகிறது.
போலீஸ் காவலில் உயிரிழந்த கோயில் காவலாளி
ஏற்கனவே, இதே சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோயில் காவலாளி தனிப்படை போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தின் வடு தற்போது வரை மாறாத நிலையில், காவல்துறை விசாரணையில் இருந்த ஒரு கைதிக்கு இது போன்ற சம்பவம் நேர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்