Ajay Rastogi: கரூர் சம்பவ விசாரணையை கண்காணிக்கும் அஜய் ரஸ்தோகி.. யார் தெரியுமா?
Karur incident: கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் குறித்து உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அஜய் ரஸ்தோகி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவர்.

கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுப்பெற்ற நீதிபதியாக அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பலரும் யார் அந்த அஜய் ரஸ்தோகி என இணையத்தில் தேடி வருகின்றனர். இவர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாவார்.
யார் அந்த அஜய் ரஸ்தோகி?
அஜய் ரஸ்தோகி 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் ஒரு சிறந்த சிவில் வழக்கறிஞராக இருந்து மறைந்த ஹரிஷ் சந்திர ரஸ்தோகி ஆவார். அவரின் வழியை பின்பற்றி அஜய் ரஸ்தோகி 1982 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 18 ஆண்டுகள் அங்கிருந்த அவர் 2018 ஆம் ஆண்டு திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க: 16 நாட்கள் துக்கத்தில் இருக்கிறோம்; கரூர் குறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா




இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அஜய் ரஸ்தோகி 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் தனது பதவி காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் 506 அமர்வில் பங்கேற்று விசாரணை நடத்தியுள்ளார். இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்பான வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.
மேலும் திருமணத்தை மீறிய உறவுகளை குற்றமாக்குதல் மற்றும் கருணை கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தனது தீர்ப்பினை வழங்கி இந்திய அளவில் பிரபலமானார். தற்போது அவரே கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் சிறப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம் இவரது குழுவில் இடம்பெறப் போகும் அந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை: விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை
தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் விசாரணை
ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மாறி மாறி அரசியல் கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் கரூர் சம்பவத்தின் விசாரணை அறிக்கை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது,.