AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இண்டி கூட்டணிக்கு யார் தலைமை.. திமுக-காங்கிரஸ் இடையே நீடிக்கும் உரசல்.. தொகுதி பங்கீட்டில் தாமதம்!

Puducherry DMK - Congress: புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிக்கு தலைமை பொறுப்பை ஏற்பதில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அத்துடன், தொகுதிகளை பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக வரவில்லை என்று கூறப்படுகிறது.

இண்டி கூட்டணிக்கு யார் தலைமை.. திமுக-காங்கிரஸ் இடையே நீடிக்கும் உரசல்.. தொகுதி பங்கீட்டில் தாமதம்!
புதுச்சேரி திமுக காங்கிரஸில் கூட்டணியில் உரசல்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Mar 2026 07:10 AM IST

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி கூட்டணி விவகாரம், கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. இதற்கு திமுக தலைமை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தெரிவித்திருந்தது. இதனால், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிடும் எனவும், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் எனவும் பேசப்பட்டது. ஆனால், திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப. சிதம்பரம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருந்தார். அத்துடன், திமுக- காங்கிரஸ் இடையே இருந்து வந்த மோதல் போக்கு நீங்கியதுடன், தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டன.

பிரதான கட்சியாக விளங்கி வரும் காங்கிரஸ்

ஒருவழியாக தமிழகத்தில் இந்த பிரச்சனை தீர்க்க பட்டிருந்தாலும், புதுச்சேரியில் புதிதாக திமுக- காங்கிரஸ் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக விளங்கி வரும் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை நடைபெற்ற 15 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக மற்றும் என். ஆர். காங்கிரஸ் தலா 2 முறையும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன. புதுச்சேரியில் பிரதான கட்சியாக விளங்கி வரும் காங்கிரஸ் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இண்டி கூட்டணி சார்பில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…

கூட்டணி தலைமை பொறுப்புக்கு திமுக-காங்கிரஸ் இடையே உரசல்

இதில், மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தலா 1 தொகுதிகளில் தேர்தலை சந்தித்திருந்தன. இந்த தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகித்த காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. திமுக 6 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அப்போது முதல் தற்போது வரை கூட்டணிக்கு தலைமை தாங்குவது தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை வசப்படுத்துவதற்காக திமுக மற்றும் காங்கிரஸ் வருகின்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.

வரும் தேர்தலில் யார் தலைமை வகிக்க வேண்டும்

இதற்காக கடந்த ஓராண்டாக இரு கட்சிகளும் சிட்டிங் தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 22 தொகுதிகளில் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட நிலையில், திமுக பேச்சுவார்த்தைக்கு வர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் இரு கட்சிகள் இடையே முரண்பாடு ஏற்பட்டு வருகிறது. இது, தேர்தல் பணி மற்று கட்சியினர் மத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. 3-ல் உதயசூரியன் சின்னம்..

Follow Us