AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…

TVK - NDA Alliance: தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதிமுகவுடன் கிட்டத்தட்ட 35 இடங்கள் கேட்கப்படுவதாக பாஜக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் த.வெ.க? இணை அமைச்சர் எல். முருகன் சொன்ன பதில்…
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Mar 2026 14:48 PM IST

திருச்சி, மார்ச் 11,2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால், திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. இதன் காரணமாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய சூழலில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தே.ஜ கூட்டணியில் தவெக?

இந்த சூழலில், இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நாகேந்திரன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாது என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

மேலும் படிக்க: அதிமுக டூ பாஜக… கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவாரா நயினார்!

ஆனால் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர இருக்கிறார். இந்த சூழலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் செய்தியாளர்கள், தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா எனக் கேட்டதற்கு, “எல்லோரும் வருகிறார்கள்” என பதில் அளித்து சென்றுள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அதிமுகவுடன் கிட்டத்தட்ட 35 இடங்கள் கேட்கப்படுவதாக பாஜக தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு:

ஆனால் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இதுகுறித்த பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் நுழைந்த நபர்… விருந்தினர் அறையில் சொகுசான தூக்கம்… அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11, 2026 அன்று தமிழகத்திற்கு வருகை தருகிறார். திருச்சியில் நடைபெற இருக்கும் மாநில மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இதையொட்டி நயினார் நாகேந்திரன், எல். முருகன் உள்ளிட்ட பலர் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமா?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எல்லோரும் வருகிறார்கள், வருவார்கள்” என சூசகமாக பதில் அளித்து சென்றுள்ளார்.

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – கடம்பூர் ராஜூ:

அதேபோல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கையாக இருக்கிறது. சகோதரர் விஜய் கட்சி தொடங்கியது முதல் அதைத்தான் கூறி வருகிறார். தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்று சொன்னதுடன் மட்டுமின்றி அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும் அதையே மையப்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.

எங்களைப் பொறுத்தவரை திமுகவை எதிர்க்கும் சக்திகள் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளோம். அதன் பிறகு அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக்கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என அரசியல் வல்லுநர்கள் தரப்பில் தெளிவாக தெரிவிக்கப்படுகிறது.

Follow Us