Karur Stampede: கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கரூர் மாவட்டத்தில் கடந்த 2025, செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சிபிஐ விசாரணைக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டெல்லி, அக்டோபர் 13: கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையானது ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட குழுவின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு தொகுதி வாரியாக தேர்தல் பரப்பரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த தேர்தலில் முதல் முறையாக களம் காணும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்கட்சியின் தலைவரான விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாவட்ட வாரியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில் செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு அவர் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கரூருக்கு மதியம் 12 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் விஜய் வழி நெடுகிலும் மக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் அளித்த வரவேற்பினால் மாலை 7 மணிக்கு தான் தேர்தல் பரப்பரை மேற்கொள்ளும் இடத்திற்கு வந்தார்.
Also Read: அவங்க மேல கை வைக்காதீங்க ; வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!




இந்த நிலையில் கூட்டம் முடிந்து அங்கு கூடியிருந்தவர்கள் திரும்பி செல்கையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றி கழகம் கட்சியின் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
Also Read: கரூர் சம்பவத்தில் பரபரப்பு; தவெக தொண்டர் நீதிமன்றத்தில் சரண்; என்ன நடந்தது?
இதே போல் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தரப்பிலும், பாஜக சார்பிலும் சிபிஐ விசாரணை வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் அனைத்தையும் கடந்த 2025, அக்டோபர் 10ஆம் தேதி நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பிலும் ,தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவெக தொண்டர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.