விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு.. தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு..
TVK Leader Vijay Campaign: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் வரவிருக்கும் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தலைமை கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்டோபர் 1, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் வரவிருக்கும் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தலைமை கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், வரவிருக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் பிரச்சாரம் ஒத்திவைப்பு:
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு…
— TVK Party HQ (@TVKPartyHQ) October 1, 2025
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13, 2025 முதல் தனது பிரச்சாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டதன் தொடர்ச்சியாக, செப்டம்பர் 20, 2025 அன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: ’யார் சொல்லியும் விஜய் கேட்கல’ கரூர் சம்பவத்தில் உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!
அப்பொழுது கரூர் மாவட்டத்தில் இரவு 7 மணிக்கு பரப்புரையை முடித்து அங்கிருந்து புறப்பட்டபின், அங்கு பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 50-க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக தனிநபர் விசாரணைக் குழு, பாஜக விசாரணைக் குழு மற்றும் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்தும் வருகின்றனர். அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிபிஐ விசாரணை கோரி தவெக மனு:
தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சிபிஐ விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கரூர் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரவிருந்த அக்டோபர் 4, 2025 அன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: கரூர் விவகாரம்.. ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை!
ஆனால் இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வாரங்கள், அதாவது அக்டோபர் 4, 2025 மற்றும் அக்டோபர் 11, 2025 அன்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.