’யார் சொல்லியும் விஜய் கேட்கல’ கரூர் சம்பவத்தில் உண்மையை உடைத்த செந்தில் பாலாஜி!
Karur TVK Rally Stampede : கரூர் மாவட்டத்தில் தவெக பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, தவெக முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர், அக்டோபர் 01 : கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பரப்புரை கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, தொண்டர்கள், ரசிகர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெகவினர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக அரசை குற்றச்சாட்டி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் கூட திமுகவை குற்றச்சாட்டினார். இப்படியான சூழலில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கரூரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ”கரூர் துயர சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றி. மேலும் கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகள். கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கரம் நீட்டப்பட்டது. கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம்.
Also Read : கரூர் விவகாரம்.. ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை!
ஊழவர் சந்தையில் அதிகபட்சமாக 5000 பேர் கூடலாம். வேலுச்சாமிபுரத்தில் 10000 செருப்புகள் வீதியில் கிடந்தன. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை, இதிலிருந்தே தெரிகிறது. மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டோ வழங்கப்படவில்லை. விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது.
’யார் சொல்லியும் விஜய் கேட்கல’
அவரது கவனத்தை ஈர்க்க செருப்பு வீசப்பட்டிருக்கலாம். என் பெயரை விஜய் சொன்னதும் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர். என்னை பற்றி 16வது நிமிடத்தில் தான் விஜய் பேசத் தொடங்கினார். 6வது நிமிடத்திலேயே செருப்பு வீசப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனத்தை முன்கூட்டியே நிறுத்திவிடலாம் என காவல்துறை எச்சரித்த பின்பும், தவெகவினர் அதை கேட்காமல் வாகனத்தை நகர்த்திச் சென்று அங்கு நிறுத்தியுள்ளனர்.
யார் சொல்லிலும் விஜய் கேட்கவில்லை. வாகனத்தை நிறுத்தால் தொடர்ந்து சென்றது. வாகனத்தின் ஷட்டரை முடியது தான் பிரச்னை. கூட்டம் உள்ளே வர வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்தார்களா? அத்தனை மீடியாவிலும் லைவ் சென்றபோது ஜெனரேட்டரை அணைக்க முடியுமா. தொலைக்காட்சிகளில் லைவ் சென்ற வீடியோவில் ஜெனரேட்டரை அணைத்த காட்சிகள் இருந்ததா?
Also Read : ‘சதி வலையில் சிக்கிய விஜய்’ கரூர் சம்பவம் குறித்து திருமாவளவன் விமர்சனம்!
கூட்ட நெரிசலில் தள்ளப்பட்ட மக்கள் வேறு வழியின்றி ஜெனரேட்டர் அறையை நோக்கி தள்ளப்பட்டனர். ஜெனரேட்டர் ஆப் ஆனபோதும் தெரு விளக்குகள் அணையவில்லை. மின் விநியோகம் இருந்தது. கூட்ட நெரிசல் தகவல் வந்த போது கரூரில் கட்சி அலுவலகத்தில்தான் இருந்தேன். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை திசை திருப்பி மடைமாற்ற முயன்றால் மக்கள் ஏற்கமாட்டார்க்ள. தவறு நடந்தால் எந்த இயக்கமாக இருந்தாலும் முதலில் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.