கரூர் சம்பவம்.. முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் நீதிமன்றத்தில் மனு!
Karur TVK Rally Stampede : தமிழக வெற்றிக் கழக தலைவர் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். கரூர் விவகாரத்தில் ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டியுள்ள நிலையில், முன்ஜாமீன் கோரியுள்ளனர்.

கரூர், செப்டம்பர் 30 : கரூர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சி.டி நிர்மல் குமாரும் மனு தாக்கல் செய்துள்ளார். தனிப்படை போலீசார் ஆனந்தை தேடி வரும் நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பரப்புரை செய்தார். அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள், ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போது, விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தவெக பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான வண்ணம் இருந்தன.
Also Read : கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!




முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மனு
இந்த நிலையில் அவர், கரூர் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சி.டி நிர்மல் குமாரும் மனு தாக்கல் செய்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் போதுமான பாதுகாப்புகளை வழங்கவில்லை என்றும் முன்ஜாமீன் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read : கரூர் சம்பவம்.. மற்றொரு தவெக நிர்வாகி கைது.. புஸ்ஸி ஆனந்தை நெருங்கும் தனிப்படை?
மேலும், தானும் கட்சியனர் மட்டுமே கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம், கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசனார் எனவும் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் தேவையில்லாமல் கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டது என்றும் எதிர்பாராத கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் போலீசார் முறையாக பணி செய்யாததே என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.