யார் மீது பழிப்போடலாம் என நாங்கள் இல்லை – விமர்சனத்திற்கு கனிமொழி பதில்..
Karur Stampede: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பேசிய திமுக எம்.பி கனிமொழி, “ அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கும். ஆனால் பிரச்சார நிகழ்ச்சிகள் என்றால் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.

கரூர், செப்டம்பர் 29, 2025: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கீழ்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. யார் மீது பழி போடுவது என்றுதான் இல்லை. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதைக் கடந்து பார்த்தால், அவர்கள் அனைவருமே தமிழக மக்கள். அவர்களுக்கு எதிராக சரி செய்து கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது.” செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிற்பகல் 12 மணிக்குத் துவக்கமாக வருகை தருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை 7 மணியளவில் தான் பரப்புரை நடைபெற்ற இடத்திற்கு அவர் வந்தடைந்தார்.
நேரம் தாமதமாகியதால் மக்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பத்தாயிரம் பேருக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 25,000-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். குறுகிய இடமாக இருந்ததால் மக்கள் நிற்கவும் இடமில்லாமல் திணறினர். காலை முதல் உணவு இன்றி, குடிநீரின்றி, சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கரூரில் உயிரிழந்த 41 பேர்:
இந்த சூழலில், பிரச்சாரம் முடித்து விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதையடுத்து, கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். உடனடியாக அதே இரவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு விரைந்து சென்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், “இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அதுவரை பொறுத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
Also Read: மக்களின் அழுகுரலை கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..
கட்டுபாடுகள் யாரையும் அச்சுறுத்துவதற்காக இல்லை – கனிமொழி:
கரூர் மக்களுக்கு நேர்ந்த அவலம், இனி ஒருபோதும் இச்சமூகத்தில் நிகழக்கூடாத ஒன்று. நடந்த இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து, அக்குடும்பங்கள் மனவலிமையுடன் மீண்டு வருவதற்கு துணை நிற்பதாக உறுதியளித்தோம். pic.twitter.com/Zf1zybFtCf
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 28, 2025
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28, 2025 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “நாங்கள் எவர்மீதும் பழி போடவில்லை. எந்தக் கட்சியின் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கான கட்டுப்பாடுகள் இருக்கும். சமீபத்தில் திமுக முப்பெரும் விழா கூட கரூரில்தான் நடந்தது; அதற்கும் கட்டுப்பாடுகள் இருந்தன. ஆளும் கட்சிக்கும் கட்டுப்பாடுகள் இருக்கும். இவை யாரையும் அச்சுறுத்தவோ, இடையூறு செய்யவோ அல்ல; மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்படுகிறவை.
Also Read: கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
கீழ்தரமான அரசியலுக்கு பதில் சொல்ல முடியாது:
அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்கும். ஆனால் பிரச்சார நிகழ்ச்சிகள் என்றால் கட்சியே பொறுப்பு ஏற்க வேண்டும். யார் மீது பழி போடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதலமைச்சர் நள்ளிரவே இங்கு விரைந்து இருக்கமாட்டார். யார் கட்சி என்பதெல்லாம் தாண்டி, இவர்கள் அனைவருமே தமிழ்நாட்டு மக்கள். அதனால் மக்களுக்கு எதிராக சதி செய்து கொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. இந்த மாதிரியான கீழ்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியான பாதை ஆகாது.” என்று கூறினார்.