Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..

CM MK Stalin Thanks Rahul Gandhi: கரூர் கூட்ட நெரிசல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இடன் ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பான பதிவில், “இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்.. ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 29 Sep 2025 06:56 AM IST

சென்னை, செப்டம்பர் 29, 2025: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்ததற்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில், “இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 27 செப்டம்பர் 2025 அன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மாலை 7 மணியளவில் அவர் பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு சென்று மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேலும் அங்கு இருந்த மக்கள் தண்ணீர் கேட்டனர். அதனால் அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி?

அதேபோல் உரையாற்றும் போது அஸ்மிகா என்ற சிறுமி காணாமல் போனதாகவும், அந்த சிறுமியை கண்டுபிடித்து தருமாறு விஜய் தனது தொண்டர்களிடம் கோரிக்கை வைத்தார். மேலும் அவர் உரையின் போது பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த வழியாக செல்ல முயன்றன. அப்போது அந்த ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுமாறு தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க: ஆயுதபூஜை விடுமுறை.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

குறுகிய இடம் என்பதால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் கூட்டம் நேரம் ஆக ஆக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கு சிக்கி தவித்தனர். மேலும் உணவின்றி, குடிநீரின்றி இருந்ததாலும், நெரிசலின் காரணமாக மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது.

விஜய் தனது உரையை முடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் மக்கள் உடனடியாக எப்படியாவது வெளியேற வேண்டும் என்பதற்காக அவசரமாக வெளியேற முயன்றனர். அப்போது பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இதில் எட்டு குழந்தைகளும் 16 பெண்களும் அடங்குவார்கள். இந்த துயரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை:

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மாநில அரசு தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா?

அருணா ஜெகதீசன் என்பவர் ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உடனடியாக நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்:


இந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டறிந்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “கரூரில் நடந்துள்ள துயரச்சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்று வருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.