Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மக்களின் அழுகுரலை கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..

Aadhav Arjuna Post: கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். மரணத்தின் வலியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அழுகுரலை கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன் – ஆதவ் அர்ஜுனா பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Sep 2025 09:48 AM IST

சென்னை, செப்டம்பர் 29, 2025: கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது. மரணத்தின் வலியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்துசெல்வதற்கான வழியின்றி தவிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கரூரில் நடந்த கோர சம்பவம்:

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், 27 செப்டம்பர் 2025 அன்று கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 7 மணியளவில் அவர் உரையை முடித்து அங்கிருந்து புறப்பட்டபோது, அங்கு கூடியிருந்த 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முயன்ற நிலையில் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி தற்போதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மேலும் படிக்க: வேறொரு நபருடன் பேசியதால் ஆத்திரம்.. காதலியை கல்லால் அடித்து கொலை செய்த காதலன்!

இந்த சம்பவத்துக்குப் பிந்தைய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்து, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதே சமயம் தமிழக அரசு தரப்பில் தலா ₹10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதற்கு கூடுதலாக, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹20 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் சம்பவம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் 28 செப்டம்பர் 2025 அன்று முதலமைச்சரை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தொடரும் சோகம்.. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..

இறுதியில் தர்மமே வெல்லும் – ஆதவ் அர்ஜுனா:

இதற்கிடையில், தமிழக வெற்றி கழக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமறைவாக உள்ளார் என்ற செய்தி சில ஊடகங்களில் வெளியானது. ஆனால் அவர் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக கட்சித் தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் மேலும் கூறியிருந்தது: “ஒரு மரணத்தின் வலியை நான் 5 வயது சிறுவனாக இருந்தபோது என் தாயின் தற்கொலையில் உணர்ந்தவன். அந்த வலி இப்போது மீண்டும் எனக்குள் எழுந்துள்ளது. இந்த துயர நிகழ்வை இந்த நிமிடம் வரை கடந்து செல்ல முடியாமல் திணறி வருகிறேன்.

உறவுகளை இழந்து தவிக்கும் அந்த குடும்பங்களின் துயரமே என்னை முழுகச் செய்கிறது. துயரமும் துக்கமும் சூழ்ந்த இந்த வேளையில் என் உறவுகளின் மனதை நான் பகிர்ந்து கொள்கிறேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… இறுதியில் தர்மமே வெல்லும்!’” என குறிப்பிட்டுள்ளார்.