Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணை கோரிய மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!

Karur Stampede Case: கரூர் தவெக தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணை கோரிய மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்!
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட காட்சி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 Oct 2025 14:05 PM IST

டெல்லி, அக்டோபர் 7: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வழக்கானது 2025, அக்டோபர் 10ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அவர் வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. விஜயின் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் பொதுமக்களும் என குறுகிய இடத்தில் சுமார் 27 ஆயிரம் பேர் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் கரூருக்கு முன்னதாக நாமக்கல்லுக்கு சென்ற விஜய் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து சேர மாலை 7 மணி ஆகிவிட்டது. வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் 20 நிமிடங்கள் மட்டுமே பேசிய விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மிகப்பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்தது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள், ஆண்கள், பெண்கள் என சுமார் 41 பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க: ’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்; பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை

இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி தொடங்கி ஏராளமான தலைவர்கள் இந்த சம்பவத்தில்  உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல்.. விஜய் செய்த தவறுகள் இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த பிரேமலதா!

இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்த குழுவுக்கு தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், வடக்கு மண்டல ஐஜிமான அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்றுக்கொண்டு அக்டோபர் 10ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.