Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜாமின் மனு தள்ளுபடி: தலைமறைவாக உள்ள ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை- பரபரப்பு தகவல்

Karur Stampede : கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நிர்மல் குமார் மற்றும் ஆனந்த் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இருவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமின் மனு தள்ளுபடி: தலைமறைவாக உள்ள ஆனந்த், நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை- பரபரப்பு தகவல்
ஆனந்த் - நிர்மல் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Oct 2025 20:00 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (Vijay) கடந்த செப்டம்பர் 27, 2025 அன்று மேற்கொண்ட பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர், நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜாமின் மனு தள்ளுபடி

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் அக்டோபர் 3, 2025 அன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படிக்க : விஜய்க்கு சப்போர்ட்.. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்!

இந்த நிலையில் தவெக தரப்பில் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன் வைத்தனர். நீதிமன்றத்தில் பேசிய வழக்கறிஞர்,  கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே தாமதமாக வந்தது போல் கூறப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை மறுத்திருக்கலாம். கூட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது கரூரில் நடந்தது திட்டமிட்ட செயல் அல்ல, விபத்து என பேசினார்.

ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை

இந்த நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர், ”இருவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரிய வரும். விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் முன்ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே முன் ஜாமின் வழங்க கூடாது” என அரசு தரப்பில் வழக்கறிஞர் தனது வாதத்தை முன் வைத்தார்.

இதையும் படிக்க : கொஞ்சம் கூட இரக்கம் இல்ல.. விஜய் பிரச்சார பேருந்துக்கு ஆயுத பூஜை.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தவெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.