Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்’ பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை

Karur TVK Rally Stampede : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், கூட்ட நெரிசலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டி உள்ளது. வேலுசாமிபுரத்தில் 3,000 பேர் மட்டுமே இருக்கக் கூடிய இடத்தில், 30,000 பேரை அனுமதித்தது தவறு என்றும் கூறியுள்ளது.

’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்’ பாஜக எம்.பிக்கள்  குழு அறிக்கை
கரூர் கூட்ட நெரிசல்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Oct 2025 12:31 PM IST

சென்னை, அக்டோபர் 06 : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான எம்.பிக்கள் குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அரசு அதிகாரிகளே கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணம் என்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்று அறிக்கையில் குற்றச்சாட்டி உள்ளது. 2025 செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை மாலை 4 மணிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், மாலை  7 மணிக்கு தான் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் வருகை தந்தார். இதனால், காலை முதலே தொண்டர்கள் காத்திருந்தனர்.   20,000க்கும் மேற்பட்டோர் கரூரில் நடந்த பரப்புரையில் கலந்து கொண்டனர்.  விஜய்  மாலை 7 மணிக்கு பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

கரூர் சம்பவம்

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிகுள்ளாக்கியது. மேலும், இந்த விவகாரம்  தொடர்பாக கரூர் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதோடு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி,  ஐஜி அஸ்ராக் கார்க் தலைமையில்  சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதே நேரத்தில்,  அரசு சார்பில் ஓய்வு பெற்ற  நீதிபதி  அருணா ஜெகதீசன் தலைமையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read : விஜயின் பிரச்சார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.. கரூர் போலீஸ் அதிரடி

இதற்கிடையில்,   கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டது. பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்பிக்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்பிக்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்’

இந்த குழு கடந்த வாரம் கரூருக்கு வந்த அவர்கள், நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். மேலும், சம்பவ இடத்திலும் விசாரணை மேற்கொண்டனர். அதோடு,   சம்பவ இடத்தில் இருந்தவர்களையும் சந்தித்த தகவலை சேகரித்தனர்.   இந்த நிலையில், பாஜக குழு கரூர் சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தெரிகிறது-

அந்த அறிக்கையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து. முழுமையான நிர்வாகத் தவறு காரணமாகவே தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்பு எற்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பரப்புரை கூட்டத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை என்றும் காலை 9 மணி முதலே கூட்டம் வரத் தொடங்கியது. நிகழ்விடத்திற்கு இரவு 7 மணிக்கு விஜய் வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : முன்ஜாமீன் கிடைக்குமா? உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆனந்த், நிர்மல் குமார்!

மேலும், அந்த அறிக்கையில், விஜய் பேசிய பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் கூட்டத்தில் மேலும் பீதி ஏற்பட்டது. அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து சிலர் உயிரிழந்தனர். வேலுசாமிபுரத்தில் 3,000 பேர் மட்டுமே இருக்கக் கூடிய இடத்தில், 30,000 பேரை அனுமதித்தது தவறு என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தங்களை சந்திக்க ஆட்சியர் மறுத்ததால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறது என்றும் பாஜக குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை பாஜக தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.