AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..

Fuel shortage fears: சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற வதந்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..
பெட்ரோல் பங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Mar 2026 08:03 AM IST

சென்னை, மார்ச் 12: சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள கூட்டுத் தாக்குதல், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் வருவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… 2 மடங்கு உயர்ந்த விறகு விலை – தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

உலக நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி:

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. போர் பதற்றம் காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுடன், விநியோகச் சங்கிலியும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாடும் முடங்கும் உணவகங்களும்:

இந்த நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்படி, தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுவில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு (Domestic LPG) முதலிடம் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் வணிக ரீதியான சிலிண்டர் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு கிடைக்காததால் சென்னையின் பல பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் சில உணவகங்களிலும் மெனுவில் உள்ள பல முக்கிய உணவு வகைகள் நீக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு மாற்றாக மக்கள் தற்போது மின் அடுப்புகள், விறகு அடுப்புகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி வருகின்றனர்.

பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்:

இதனிடையே, சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகமும் பாதிக்கப்படலாம் என்ற வதந்தி காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதனால் நேற்று இரவு முதல் தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ஒருசிலர் தங்களது தினசரி தேவையை கருதி பயன்படுத்தும் தங்களது வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்புவதோடு மட்டுமன்றி, வாட்டர் கேன்கள் மற்றும் பக்கெட்டுகளிலும் எரிபொருளைச் சேகரித்துச் செல்வதைக் காண முடிகிறது.

இதையும் படிக்க : கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு

பதற்றம் குறையாத மக்கள்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருள் இருப்பு குறித்துப் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றாலும், போர்ச் சூழல் நீடிப்பதால் பொதுமக்களின் பதற்றம் குறையவில்லை. நிலைமை நீடித்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொதுப் போக்குவரத்துப் பாதிப்பு போன்ற சிக்கல்கள் உருவாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Follow Us